மின்னணு (எலெக்ட்ரானிக்ஸ்) துறையை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ. 3.60 கோடியை ஒதுக்கியுள்ளது. எலெக்ட்ரானிக் பொருள் வடிவமைப்பு, உற்பத்தித் துறைக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும். இந்தத் துறையில் சிறப்பாக செயல்படும் நிறுவனங் களை ஊக்குவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்காக தொடக்கத்தில் ரூ. 3.60 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக துறையின் இணைச் செயலர் அஜய் குமார் தெரிவித்தார். வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கென மின்னணு துறைக்கு அரசு வழங்கும் முதலாவது தேசிய விருது இதுவாகும். ஏற்றுமதி, கண்டுபிடிப்புகள், அதிவேகமாக வளரும் நிறுவனம், சிறந்த நிறுவனம் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இதில் ரொக்கப் பரிசு ஏதும் கிடையாது.
மின்னணு துறையில் 90 சதவீத பொருள்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையை மாற்றும் நோக்கில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்துறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2020-ம் ஆண்டில் இத்துறையின் இறக்குமதி 30,000 கோடி டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டே அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் மின்னணு துறைக்கென தனி கொள்கை வெளியிடப்பட்டது. இத்துறையில் சிறிய குழு நிறுவனங்கள் அமைப்பிற்கு வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அரசு ரூ. 63 ஆயிரம் கோடி செலவில் 2 சிப் தயாரிப்பு நிறுவனங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.