அடுத்த நிதி ஆண்டின் (2014) இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.5 சதவீதமாக இருக்கும் என்று டன் அண்ட் பிராட் ஸ்டிரீட் அறிக்கை தெரிவிக்கிறது. எஞ்சியுள்ள 2 காலாண்டுகளில் இது மேலும் குறையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மையமான டன் அண்ட் பிராட் ஸ்டிரீட் நடப்பு நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையான இரண்டாம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 4.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் எப்போதும் இல்லாத அளவாக 5 சதவீத அளவுக்குச் சரிந்தது. வேளாண், உற்பத்தித் துறை மற்றும் சுரங்கத்துறை வளர்ச்சி சரிவு காரணமாக பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்தது.
நடப்பு நிதி ஆண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் பண வீக்கத்தின் அளவு குறைய வேயில்லை. உற்பத்தித்துறையும் வளர்ச்சியடையவேயில்லை. நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேசமயம் தனியார் துறையின் நுகர்வு அளவு தொடர்ந்து பலவீனமாக உள்ளது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் மையத்தின் இந்தியப் பிரிவு மூத்த பொருளாதார அறிஞர் அருண் சிங் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த ஜிடிபி 2014-ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும் பிறகு மற்ற இரு காலாண்டுகளில் அது குறையும் என்றும் சிங் தெரிவித்தார்.
இப்போதைக்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பது மிகப் பெரிய விஷயமாகும். ஏற்றுமதியை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க விஷயமாகும். கட்டுமான திட்டங்கள் எந்த அளவுக்கு நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது முதலீட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் முக்கிய நடவடிக்கையாகும். இத்தகைய திட்டப்பணிகளைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்துவதற்கு மேலும் சில மாதங்களாகும்.
ரிசர்வ் வங்கியின் உதவியோடு பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுத்தேர்தல் வரவுள்ள சூழலில் வங்கி எடுக்கும் நடவடிக்கைகள் வர்த்தக உலகில் எத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என்று சிங் குறிப்பிட்டார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு இன்னமும் ஸ்திரமற்ற நிலையிலேயே இருக்கிறது. இதற்கு பல்வேறு நெருக்குதலே காரணம். முக்கியமாக அமெரிக்க ஃபெடரல் அரசு ஊக்க நடவடிக்கைகளை தொடருமா அல்லது திரும்பப் பெறுமா என்ற யூகங்களும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும். நவம்பர் மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ. 62.60 முதல் ரூ. 62.80 என்ற நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.