வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (ஐடிஏடி) கெய்ர்ன் இந்தியா நிறுவனம் ரூ.10,247 கோடி வரி பாக்கியை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் வருமான வரித்துறை குறிப்பிட்டிருந்த ரூ. 18,800 கோடி வரிக்கான வட்டித் தொகையை செலுத்தத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக கெய்ர்ன் நிறுவனம் முடிவு செய்தால், முதலில் வரித் தொகையை செலுத்திவிட்டு பிறகு மேல் முறையீடு செய்யலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள சர்வதேச சமரச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் தொடர்ந்த வழக்கும் நடைபெற்று வருகிறது. முன் தேதியிட்டு வரி விதிப்பு முறையை அரசு செயல்படுத்தியதை எதிர்த்து கெய்ர்ன் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சர்வதேச தீர்ப்பாயத்தில் நடைபெறும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2018-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என தெரிகிறது. வரி தொடர்பாக உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.
2006-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் 69 சதவீத பங்குகளை அதன் தாய் நிறுவனமான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இந்திய நிறுவனத்தின் பங்குகளை தாய் நிறுவனத்துக்கு மாற்றியதில் கிடைத்த ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அப்போது கூறியது. ஆனால் தாய் நிறுவனத்துக்கு பங்கு பரிமாறிக் கொண்டதற்கு வரி செலுத்தத் தேவையில்லை என்று கெய்ர்ன் வாதாடியது.
2007-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டின்போது பங்கு மாற்றல் விவகாரம் வெளி வந்தது.
2010-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா குழுமம் கையகப்படுத்தியது. இருப்பினும் இதில் கெய்ர்ன் பிஎல்சி நிறுவனம் 9.82 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
பங்கு பரிவர்த்தனையில் கிடைத்த ஆதாயம் எந்த வகையிலும் வரி விதிப்புக்குள்ளாகாது என கெய்ர்ன் பிஎல்சி தொடர்ந்து வாதாடி வந்தது.
ஆனால் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் வளங்கள் அடிப்படையில்தான் பங்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இது மூலதன ஆதாயமாகத்தான் கருதப்படும் என்றும், அது வரி விதிப்புக்குள்பட்டது என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வரி விதிப்பானது முன்தேதியிட்ட ஆணை அடிப்படையில் விதிக்கப்பட்டதால் இதற்காக கணக்கிடப்பட்ட வட்டித் தொகையான ரூ. 18,800 கோடியை செலுத்த வேண்டியதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.