வணிகம்

ஜிஎஸ்டி வரி ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும்: அருண் ஜேட்லி கருத்து

பிடிஐ

வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த வரி விகிதம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியம் (டிஐபிபி) ஏற்பாடு செய்திருந்த ``மேக் இன் இந்தியா’’ கருத்தரங்கில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

ஜிஎஸ்டி அமலுக்கு வரும் பட்சத்தில் மற்ற அனைத்து மறைமுகமான வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும். இதன் மூலம் தேசிய அளவில் ஒரே அளவிலான சந்தையாக இருக்கும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2 சதவீதம் வரை உயரும். மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், மாநில நிதி அமைச்சர்கள் உள்ளடங்கிய ஜிஎஸ்டி குழு இந்த வரி விகிதத்தை பரிந்துரை செய்யும்.

என்ன வரி விகிதம் என்பது இப்போதைக்கு எனக்கு தெரியவில்லை. நிதி அமைச்சகம் நிர்ணயம் செய்த வல்லுநர் குழு தங்களுடைய பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். ஆனால் இந்த வரிவிகிதம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். இந்த மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அடுத்த சில வருடங்களில் இந்தியாவில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பருவமழை கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தொழில் புரிவதற்கான சூழலை மத்திய அரசு மேம்படுத்தி இருக்கிறது. ஸ்திரமான கொள்கைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. தவிர சட்டங்களை அடிக்கடி மாற்றுவதில்லை என்ற உறுதிமொழியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

மார்ச் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாகும். ஒட்டுமொத்த நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இப்போது சர்வதேச அளவில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இந்தியா இருக்கிறது. இப்போது சர்வதேச அளவில் சாதகம் இல்லாத சூழலில் இந்தியா அதிக வளர்ச்சி அடையும் நாடாக இருக்கிறது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பல வங்கிகள் மார்ச் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த நிலைமையில் வரும் திங்கள் கிழமை (6-ம் தேதி) பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை நிதி அமைச்சர் ஜேட்லி சந்திக்க இருக்கிறார்.

வாராக்கடன் தவிர, மத்திய அரசின் புதிய திட்டங்களான ``ஸ்டாண்ட் அப் இந்தியா’’, ``முத்ரா’’, ``பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா’’, ``அடல் பென்ஷன் யோஜனா’’ ஆகிய திட்டங்களின் செயல்பாடு குறித்தும் விவாதிக்க இருக்கிறார். இந்த விவாதத்தில் நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நிதித்துறை செயலாளர் மற்றும் நிதி அமைச்சக உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

SCROLL FOR NEXT