வணிகம்

விமானப் போக்குவரத்துத் துறையில் அமெரிக்க முதலீடு: இந்தியா அழைப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்தியச் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய விமானப் போக்குவரத்து சந்தையில் வளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க-இந்திய விமானப் போக்குவரத்து குறித்த மூன்று நாள் மாநாட்டில் அஜீத் சிங் பேசியது:

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையானது அபரிமித வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் தனியார் துறையினருக்கு இத்துறையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சியோடு அமெரிக்க நிறுவனங்களும் வளர்ச்சியடையலாம் என்று அவர் கூறினார். அமெரிக்க நண்பர்களே இந்தியாவில் உள்ள பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் அதிக அளவில் விமானங்களை மற்றும் விமான நிறுவனங்களைக் கையக ப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உரிய முதலீட்டு திட்டங்களோடு விமானப் போக்குவரத்துத் துறை வளமான துறையாக அமையும் என்றார்.

விமானப் போக்குவரத்து மிக அதிக அளவில் இந்தியாவில் விரிவடைந்து வருகிறது. இதை ஈடுகட்டும் வகையில் தனியார் பங்களிப்போடு புதிய சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படும் விமான நிலையங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

உலகிலேயே 9-வது பெரிய விமானப் போக்குவரத்தினை கையாளும் நாடு இந்தியா. 12 கோடி உள்நாட்டு பயணிகள் 4 கோடி வெளிநாட்டு பயணிகள் 40 நாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். 85 சர்வதேச விமான நிறுவனங்கள் மற்றும் 5 இந்திய நிறுவனங்கள் பயணிகள் போக்குவரத்தைச் சமாளிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறை வளம் கொழிக்கும் துறையாக இருப்பது கண்கூடு. இத்துறையில் 49 சதவீதம் வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டு முடிவில் விமான போக்குவரத்து நிர்வாகம், அதைக் கட்டுப்படுத்துவது, அமை மேம்படுத்துவதற்கான அமெரிக்க தீர்வு உள்ளிட்டவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் கூறினார்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே அமெரிக்க வர்த்த வாய்ப்புகளைக் கண்டறிவதோடு இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதும் ஆகும்.

SCROLL FOR NEXT