மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 47,050 கோடி சரிந்துள்ளது. இதில் பிரதான நிறுவனமான ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த 6 மாதங்களில் இந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு இதுவாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு ரூ. 11,669 கோடியும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் ரூ. 10,679 கோடியும், சரிந்தன. ஒஎன்ஜிசி நிறுவன பங்கு மதிப்பு ரூ. 6,631 கோடி சரிந்தது. சரிவுக்குப் பிறகு ரிலையன்ஸ் பங்கு மதிப்பு ரூ. 2,68,502 கோடியாகவும், ஹெச்டிஎப்சி வங்கிப் பங்கு மதிப்பு ரூ. 1,50,794 கோடியாகும், ஓஎன்ஜிசி பங்கு மதிப்பு ரூ. 2,35,703 கோடியாகவும் இருந்தது.
மிட் கேப் பங்குகளான கோல் இந்தியாவின் பங்கு மதிப்பு ரூ. 6,569 கோடி சரிந்து ரூ. 1,56,330 கோடியாக இருந்தது. ஹெச்டிஎப்சி நிறுவனப் பங்கு மதிப்பு ரூ. 5,738 கோடி சரிந்து ரூ. 1,25,999 கோடியாக இருந்தது. இன்ஃபோசிஸ் பங்கு மதிப்பு ரூ. 3,423 கோடி சரிந்து ரூ. 2,12,435 கோடியாக இருந்தது.