நிறுவனங்கள் லாபத்துக்காகத் தான் இயங்குகின்றன என்ற கோட்பாட்டுக்கு மாற்றான ஒரு கோட்பாடாகும் இது. ஒரு பெரிய நிறுவனத்தில் பல குழுக்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறான குறிக்கோள்கள் இருக்கும்போது அவற்றில் எதை எடுப்பது என்பதில் தொடங்கும் பிரச்சினைகள், கடைசி வரை நிறுவனத்தின் எல்லா முடிவுகளையும் பாதிக்கும். நிறுவனத்தின் குறிக்கோள்களையும், முடிவுகளையும் நிர்வாகத்தின் அனுபவமும், விருப்பு வெறுப்புகளும் நிர்ணயிக்கும் என்பதை இக்கோட்பாடு கூறுகிறது.
Cyert, March என்ற இருவர் இந்தக் கோட்பாடை உருவாக்கினர். ஒரு நிறுவனத்திற்கு ஐந்து முக்கியக் குறிக்கோள்கள் இருக்கும், அவை: உற்பத்தி (production), இருப்பு (inventory), விற்பனை (sales), சந்தையில் பங்கு (market share), லாபம் (profit). இக்குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் ஒரு சில மேலாளர்களால் முன்னிறுத்தப்படும். பிறகு, இவர்களுக்கிடையே நடக்கும் விவாதங்களின் முடிவில் ஒரு சில குறிக்கோள்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில் வரும்.
இதில் குறிக்கோள்களுக்கிடையே உள்ள எதிர்மறைத் தன்மை, ஒன்றுக்கொன்று ஒவ்வாதிருப்பது என எல்லாம் நீக்கப்படவேண்டும். பொதுவாக மனிதன் பகுத்தறிவுடன் இந்தப் பிரச்சனையை அணுகுவது என்ற ஒரு முறை உண்டு. ஆனால் பல நேரங்களில் அவனுடைய சொந்த அனுபவமும், விருப்பு வெறுப்புகளும் இவற்றை முடிவு செய்கின்றன என்பதுதான் இக்கோட்பாட்டின் மையக்கருத்தாகும். இவ்வாறு அனுபவமும், விருப்பு வெறுப்புகளும் குறிக்கோள்களை நிர்ணயிக்கும்போது, புதிய குறிக்கோள்கள் உருவாவதுடன், குறிக்கோள்களுக்கிடையே முரண்பாடுகளும் தொடரும்.
இக்கோட்பாடு, ஒரு நிறுவனத்திற்குள் நிகழும் கருத்து வேறுபாடுகளும் அதனால் ஏற்படும் முடிவெடுக்கமுடியாத குழப்பங்களும், செயல்திறன் குறைவதையும் கூறுகின்றது. குறிக்கோள்களில் உள்ள குழப்பங்கள், திட்டமிடுதலை பாதித்து, மேலாண்மையின் ஒவ்வொரு தளத்திலும் ஆணைகளை வழங்குவதில் குழப்பங்கள் நீடிக்கும் என்று இக்கோட்பாடு கூறுகிறது.