வணிகம்

இந்திய பொருளாதாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை: மான்டேக் சிங் அலுவாலியா

செய்திப்பிரிவு

இந்திய பொருளாதாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார். பொருளாதார சூழல் அபாயகரமான நிலையில் இல்லை, ஏனெனில் ஏற்கெனவே நாட்டின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை எட்டிவிட்டது என்று கூறினார்.

டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கு இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் பாஸ்டன் ஆலோசனை குழுமம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மேலும் கூறியது:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டி அதற்கும் மேலாக வளர்ந்து வரும் சூழலில் எச்சரிக்கை தேவையில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் 6 சதவீத வளர்ச்சியையும் நீண்ட கால அடிப்படையில் 7.5 சதவீத வளர்ச்சியையும் எட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் பணியைத் தொடரும் என்று குறிப்பிட்டார். நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது, சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சியை எட்டியதுதான்.

இத்தகைய வளர்ச்சியை எட்டியதற்கு பல்வேறு காரணிகளும் காரணமாக அமைந்தன. நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும்போது 7.5 சதவீத வளர்ச்சி சாத்தியமானதே என்று மான்டெக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மத்தியில் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அமையவிருக்கும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப முன்னுரிமையில் சிறிதளவு மாறுதல் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிதிப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதில் இன்னமும் சிக்கல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் வங்கிகள் தொடர்ந்து தங்களது வர்த்தகத்தை மேற்கொள்வது சிக்கலாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த மட்டில் வங்கிக் கடனை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கவில்லை. இருப்பினும் அன்னிய நேரடி முதலீடுகளைப் பெரிதும் நம்பியிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

வளரும் நாடுகளில் பொருளாதாரம் பெரும்பாலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் கடன் பத்திரங்ளை நம்பியிருக்கும். இவைகளைத் தவிர்த்தே வங்கிக் கடனை எதிர்பார்க்கும் என்றார் மான்டெக் சிங் அலுவாலியா.

SCROLL FOR NEXT