கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் தனது இந்திய பிரிவில் 24.33 சதவீத பங்குகளை வாங்கிக் கொள்ள அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் அரவிந்த் மாயாராம் தலைமையில் நடைபெற்ற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரிட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் இந்திய நிறுவனமான ஸ்மிஸ்கிளைன் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 24.55 சதவீத பங்குகள் அல்லது 2.06 கோடி சம பங்குகளை வெளிச் சந்தை விலையில் வாங்க முடிவு செய்தது.
இதற்கு அனுமதி அளித்ததன் மூலம் ரூ. 6,400 கோடி அன்னியச் செலாவணி முதலீடு இந்தியாவுக்குள் வரும் என எப்ஐபிபி தெரிவித்துள்ளது. ஜிஎஸ்கே குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனத்தில் ஏற்கெனவே பெரும்பான்மை பங்குகளை ஸ்மித்கிளைன் நிறுவனம் வைத்துள்ளது. இந்த பங்கு கொள்முதலுக்குப் பிறகு நிறுவனத்தில் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனத்தின் பங்கு அளவு 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனத்தில் முன்பு 50.67 சதவீத பங்குகள் கிளாஸ்கோ நிறுவனம் வசம் இருந்தன.
நிறுவனத்தின் பங்குகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. ஏல நடைமுறை பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும். ஜிஎஸ்கே பார்மா நிறுவனம் மருந்து பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அது தவிர தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் 5,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பார்மா துறையில் எப்டிஐ முதலீடு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் ரூ. 5,168 கோடியாகும். பிரிட்டனைச் சேர்ந்த மிலான் பார்மா நிறுவனம் ஏஜிலா ஸ்பெஷாலிட்டீஸ் நிறுவனத்தை வாங்கியது.
2008- ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த டெய்சி சாங்கியோ நிறுவனம் டாபர் நிறுவனத்தை வாங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த அபோட் நிறுவனம் பிரமிள் நிறுவனத்தை 370 கோடி டாலருக்கு வாங்கியது. மத்திய அரசு பார்மா துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது. ஏற்கெனவே இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது பங்கு அளவை உயர்த்திக் கொள்ள எப்ஐபிபி-யிடம் அனுமதி பெற வேண்டும்.