ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக என்.எஸ். விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது இவர் செயல் இயக்குநராக இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செயல் இயக்குநராக இருக்கிறார். அமைச்சரவை நியமன குழு நேற்று இவரது நியமனத்தை வெளியிட்டது.
தற்போது உள்ள துணை கவர்னர்களுள் ஒருவரான ஹெச்.ஆர்.கான் வரும் ஜூலை 3-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். அவருக்குப் பதிலாக விஸ்வநாதன் துணை கவர்னராக இருப்பார்.
பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.
**********
குவிஸ் கார்ப் ஐபிஓ: இன்று முதல் தொடக்கம்
குவிஸ் கார்ப் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஒ) இன்று தொடங்குகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்கு ரூ.310 முதல் ரூ.317 வரை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கும் இந்த ஐபிஓ ஜூலை 1-ம் தேதி முடிவடைகிறது.
2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படுகிறது. மனிதவளம் மற்றும் ஐடி சேவைகள் பிரிவில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. 26 நகரங்களில் 47 அலுவலகங்கள் இந்த நிறுவனத்துக்கு உள்ளன. வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலும் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளன.
ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியில் கடனை திருப்பி செலுத்துவது மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்போவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிறுவனத்தில் தாமஸ் குக் (இந்தியா) 69.6 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
************
மியூச்சுவல் பண்ட்: ரூ.76,000 கோடி முதலீடு
நடப்பு நிதி ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடன் சந்தையில் ரூ.76,000 கோடியை முதலீடு செய்துள்ளன. இதில் ரூ.43,000 கோடி நடப்பு ஜூன் மாதத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதத்தில் ரூ.2,317 கோடி கடன் சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளன. ஏப்ரலில் ரூ.35,523 கோடி முதலீடு செய்யப்பட்டது.
நடப்பு ஜூன் மாதத்தில் ரூ.600 கோடியை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ரூ.7,200 கோடியை பங்குச்சந்தையில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்துள்ளன. கடந்த நிதி ஆண்டில் ரூ.64,000 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.