வணிகம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லாபம் ரூ.376 கோடி - இலங்கையில் கிளை தொடங்க திட்டம்

செய்திப்பிரிவு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 376 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 650 கோடி லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மிலிந்த் காரத் தெரிவித்தார்.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அனுமதி கிடைத்தபிறகு இலங்கையில் கிளையை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும்அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிறுவனம் ரூ.5291 கோடிக்கு பிரீமியம் வருவாய் பெற்றுள்ளது. மேலும், இந்த நிதி ஆண்டுக்கு பிரீமிய வருவாய் இலக்கு ரூ.11,000 கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது என்று நிறுவனத்தின் முதல் அரையாண்டு நிதி நிலை அறிக்கையை நேற்று வெளியிட்டபோது காரத் கூறினார்.

இது தொடர்பாக செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியது:

இந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.5,291 கோடிக்கு பிரீமியம் வருவாய் பெற்றது. இது 11 சதவீத வளர்ச்சியாகும். சுகாதாரக் காப்பீட்டில் 22 சதவீதம், மோட்டார் வாகன காப்பீடு 18 சதவீதம், தீ விபத்து தொடர்பாக காப்பீட்டில் 5.6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகர லாபம் ரூ.376 கோடி கிடைத் துள்ளது.

முதலீடுகள் மீதான லாபம் ரூ.1067.40 கோடியாகும். 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு சந்தை மதிப்பு ரூ.25,586 கோடியாகும். இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ரூ.11,000 கோடி பிரிமியம் தொகை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் முகவர் எண்ணிக்கையை 80,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஓய்வூதியம் பெறுவோர் திட்டத்தின் கீழ் 6,22,445 பேரின் சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாடுமுழுவதும் காப்பீ்ட்டை பரவலாக்க 4-ம் நிலை நகரங்களில் 200 மைக்ரோ அலுவலகங்கள் திறக்க திட்டமிட்டு தற்போது 85 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற அலுவலகங்களில் விரைவில் திறக்கப்படும்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ரூ.300 கோடி மதிப்பிலான 2726 இழப்புக் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன. இதில், 75 சதவீதம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றார் மிலிந்த் காரத்.

SCROLL FOR NEXT