வணிகம்

சிறப்பு வங்கிகளுக்கு அனுமதி - ரிசர்வ் வங்கிக்கு சிதம்பரம் ஆலோசனை

செய்திப்பிரிவு

வங்கி தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் சிறப்பு வங்கிகள் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்குங்கள் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை கூறினார்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் 2013 மாநாட்டில் துவக்க உரை ஆற்றிய அவர், ஏற்கெனவே செயல்படும் வங்கிகளைப் போல புதிதாகத் தொடங்கப்பட உள்ள வங்கிகள் செயல்படுவதில் பலன் அதிகம் இருக்காது. ஏற்கெனவே உள்ள வங்கிகளின் குளோனிங் பிரதியாக புதிய வங்கிகள் இருப்பதில் எவ்வித பலனும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கூறியுள்ளபடி புதிதாகத் தொடங்க உள்ள வங்கிகளுக்கான லைசென்ஸ் 2014 ஜனவரி மாதம் வழங்கப்பட்டுவிடும் என நம்புவதாக அவர் கூறினார்.

ஏற்கெனவே செயல்படும் வங்கிகளைப் போன்று புதிதாக விண்ணப்பித்துள்ள வங்கிகளும் செயல்படுமாயின், அத்தகைய வங்கிகளுக்கு லைசென்ஸ் அளிப்பதில் எவ்வித பலனும் இல்லை என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.

இப்போதைய சூழலில் புதிய சிந்தனை, உத்தி அடிப்படையில் ஏற்கெனவே செயல்படும் வங்கிகளைக் காட்டிலும் வித்தியாசமாக செயல்படுதல் அதேசமயம் வங்கிச் சேவை எந்தப் பிரிவினருக்குத் தேவையோ அவர்களைச் சென்றடையும் விதமாக புதிய வங்கிகள் இருக்க வேண்டும். வங்கிகள் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையிலும், குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு ஏற்ற வங்கிகள் புதிதாக வர வேண்டும் என்றே தான் விரும்புவதாக அவர் கூறினார்.

ஏழை எளிய மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வங்கிகள் உருவாக வேண்டும். வங்கிச் சேவையே கிடைக்காதவர்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கும் வகையில் புதிய வங்கிகளின் இலக்கு அமைய வேண்டும் என்றார்.

இப்போதைய தேவை, ஏற்கெனவே உள்ள வங்கிகளைப் போல புதிய வங்கிகள் இருக்கக் கூடாது என்பதே. வித்தியாசமான வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ஆர்பிஐ கவர்னர் விரிவாக விளக்க வேண்டும் என்று சிதம்பரம் கூறினார்.

ஜூலை 1, 2013 நிலவரப்படி மொத்தம் 26 நிறுவனங்கள் வங்கி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்துள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா குழுமம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ், ஆதித்ய பிர்லா குழுமம் ஆகியன லைசென்ஸ் கோரி விண்ணப்பித்துள்ள பெரும் தொழில் நிறுவனங்களாகும்.

அரசு நிறுவனங்களில் இந்தியா போஸ்ட், ஐஎப்சிஐ ஆகியனவும் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன. பந்தன் ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜனகலட்சுமி பைனான்சியல் ஆகிய தனியார் நிறுவனங்களும் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் பட்டியலில் அடங்கும்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கான தெளிவான விளக்கம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்க 2 கட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 10 வங்கிகள் 1993-ம் ஆண்டு வழிகாட்டுதலின்படி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டன.

இந்த வழிகாட்டுநெறியானது 2001-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. ஏற்கெனவே தனியார் வங்கிகள் செயல்படுவதைக் கண்காணித்து அதனடிப்படையில் வழிகாட்டு நெறியில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அப்போது கோடக் மஹிந்திரா மற்றும் யெஸ் வங்கிகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு 2003-04-ல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு தனியார் வங்கி தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை:

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) கடந்த நிதி ஆண்டில் 8,800 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இது 5,600 கோடி டாலராக கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் சிதம்பரம். பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்திருப்பதால் உணவு உற்பத்தி அதிகரிக்கும். இரண்டாவது பிற்பாதியில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். ரிசர்வ் வங்கியே வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் முதல் 5.5 சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை

யால் அதாவது ரெபோ வட்டி விகிதம் இரண்டு முறை உயர்த்தப்பட்டதால் பணவீக்கம் கட்டுப்படவில்லை. இந்நிலையில் பொருள் விநியோகத்தை சீராக்குவதன் மூலமே உணவுப் பொருளின் விலை குறையும் என்பதை உணர வேண்டிய தருணமிது என்று அவர் சுட்டிக் காட்டினார். உணவுப் பொருள் சப்ளையில் உள்ள இடர்களை நீக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது நாட்டில் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கான வளங்கள் உள்ளன. இதை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் நாம் செல்வோம் என்றார் சிதம்பரம்.

SCROLL FOR NEXT