வணிகம்

ரூபாய் மதிப்பு 161 பைசா உயர்வு; ஒரு மாதத்தில் புதிய உச்சம்!

செய்திப்பிரிவு

ஃபெடரல் வங்கியின் முக்கியக் கொள்கையின் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 161 பைசா உயர்ந்தது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலான காலத்தில், ரூ.61.77 என்ற புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது ரூபாய் மதிப்பு.

அன்னிய செலாவணி சந்தையில் புதன்கிழமை மாலை வர்த்தகம் முடிவடைந்தபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 161 பைசா உயர்ந்து ரூ.61.77 ஆக இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் நேற்று இரவு ஒரு முக்கியமான கொள்கையை முடிவினை அறிவித்தது. அதாவது கியூ.இ. 3 என்று சொல்லகூடிய ஊக்க நடவடிக்கையை (8,500 கோடி டாலர்) இப்போது நிறுத்தப் போவதில்லை என்று அதன் தலைவர் பென் பெர்னான்கி தெரிவித்திருக்கிறார். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு இந்த க்யூ.இ.3யை நிறுத்த முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

இதன் காரணமாக பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். இந்திய சந்தைகள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் முக்கிய பங்குச் சந்தைகள் அனைத்தும் ஏற்றம் அடைந்திருக்கின்றன.

ஊக்க நடவடிக்கை தொடரும் என்ற காரணத்தால் டாலரின் மதிப்பு சரிந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு 2.54 சதவிகிதத்துக்கு உயர்ந்தது. இதற்கு முன், ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரூபாய் மதிப்பில் 225 பைசா உயர்ந்ததுதான் உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்திய ரூபாய் மட்டுமல்லாமல் உலகின் முக்கிய கரன்சிகளுக்கு எதிராகவும் டாலரின் மதிப்பு சரிந்தது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலர் குறியீட்டெண் சரிந்தது.

இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் மிகுந்த ஏற்ற நிலை இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 684.48 புள்ளிகள் உயர்ந்து, 20,646.64 ஆக காணப்பட்டது.

SCROLL FOR NEXT