வணிகம்

சசிகலா குற்றவாளி என தீர்ப்பு: சன், ராஜ் டிவி பங்குகள் ஏற்றம்

செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சன் டிவி மற்றும் ராஜ் டிவி பங்குகள் உயர்ந்துள்ளன.

சன் டிவி பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் இடையே 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. வர்த்தகம் முடிவில் 2.88 சதவீதம் உயர்ந்து 733.25 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுக்கப் பட்டதால் சன் டிவி பங்கு அப்போது 25 சதவீதம் வரை உயர்ந்தது.

அதேபோல ராஜ்டிவி பங்கு களும் நேற்று உயர்ந்து முடிந்தன. வர்த்தகத்தின் இடையே 12 சதவீதம் அளவுக்கு உயர்ந்தாலும், வர்த்தகத்தின் முடிவில் 5.3 சதவீதம் உயர்ந்து 68.45 ரூபாயில் முடிவடைந்தது. ஆனால் இந்த ஏற்றத்தை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் இந்த இரு பங்குகளில் இருந்தும் வெளியேறு மாறு பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT