ஏடிஎம் இயந்திரங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ. 25 கட்டணம் வசூலிக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது சேவை கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த கட்டண நடைமுறை வரும் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.
தங்களது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் எடுக்கும் பணத்துக்கு ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவைக் கட்டணம் விதிக்கப்படும். ரூபே அட்டை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் தற்போதுள்ள ரூபாய் நோட்டுகளில் ரூ.5,000த்துக்கும் மேற்பட்ட கிழிந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளை மாற்றுவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இது தவிர ஒரே மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கியில் பணம் எடுத்தால் அதற்கான சேவைக் கட்டணமாக ரூ.50 மற்றும் சேவை வரியும், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் அதற்கு ரூ. 20 மற்றும் அதனுடன் சேர்த்து சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் அதற்கு ரூ.10 மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும் என கட்டண முறைகளை அறிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர் தனது வங்கிக் கிளையில் மாதத்துக்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.50 மற்றும் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
வங்கி முகவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்களுக்கும் கட்டணம் அறிவித்துள்ளது. ரூ.10,000 வரையிலான டெபாசிட்டுக்கு 0.25% கட்டணமும் பிடித்தம் செய்யப்படும். இதற்கு குறைந்தது ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரை சேவைக் கட்டணமாக, இதனுடன் சேவை வரியும் செலுத்த வேண்டும். அதேபோல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். முகவர்கள் மூலமாக ரூ.2,000 பணம் எடுத்தால் 2.50% சேவைக் கட்டணம் மற்றும் குறைந்தபட்சமாக ரூ.6 உடன், சேவை வரியும் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிமாற்றம் செய்தால், ரூ.1 லட்சம் வரையிலான தொகைக்கு ரூ.5 கட்டணத்துடன் சேவை வரியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ரூ.15 சேவைக் கட்டணத்துடன் சேவை வரியும் செலுத்த வேண்டும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ரூ. 25 கட்டணமும், சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும்.
கிழிந்த மற்றும் சேதமடைந்த பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு ரூ.5,000 வரை அல்லது 20 நோட்டுகளை மாற்றிக் கொள்ள கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட நோட்டுகளை மாற்றினால் ஒரு நோட்டுக்கு ரூ.2 மற்றும் சேவை வரி விதிக்கப்படும். ரூ.5,000 த்துக்கும் மேற்பட்ட பழைய நோட்டுகளை மாற்றினால் ஒரு நோட்டுக்கு ரூ.2 கட்டணம் அல்லது ரூ.1,000த்துக்கு 5 ரூபாய் வீதம் கட்டணமும், சேவை வரியும் பிடித்தம் செய்யப்படும். இதில் எது அதிகமோ அதை கட்டணமாக வசூலிக்கப்படும்.
உதாரணமாக 500 ரூபாய் நோட்டுகளை 25 எண்ணிக்கையில் மாற்றும்போது, அதன் எண்ணிக் கைக்கு ஏற்ப, ஒரு நோட்டுக்கு 2 ரூபாய் வீதம் ரூ. 50 கட்டணமாக மதிப்பிடப்படும். இன்னொரு முறையில் ரூபாய் மதிப்பு 12,500க்கு ஏற்ப, 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் வீதம் கட்டணம் என்றால் ரூ.62.50 கட்டணம் மதிப்பிடப்படும். இதில் அதிகபட்ச தொகையான ரூ.62.50 உடன் சேவை வரி செலுத்த வேண்டும்.
சுற்றறிக்கையில் தவறு: எஸ்பிஐ விளக்கம்
ஏடிஎம்-மிலிருந்து பணம் எடுக்க ரூ. 25 கட்டணம் வசூலிக்கப்படும் என செய்தி வெளியானது தொடர்பாக எஸ்பிஐ நேற்று இரவு விளக்கம் அளித்துள்ளது.
தாங்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் தவறு நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை வங்கிக் கிளைககளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் வாலட்டிலிருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முறை குறித்த சுற்றறிக்கை அனுப்பியதில் தவறு நிகழ்ந்துள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.