(சென்ற வாரத் தொடர்ச்சி)
1892 மூன்றாம் கனவு உருவாகத் தொடங்கியது. டாடா அறக்கட்டளை, மாணவர்களின் மேல்நாட்டு உயர்கல்விக்குக் கடனுதவி வழங்கத் தொடங்கியது. ராஜா ராமண்ணா, ஜெயந்த் நர்லிக்கர் போன்ற பிரபல விஞ்ஞானிகள், குஜராத் முதலமைச்சரான ஜிவராஜ் மேத்தா, டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் ஃபரூக் இரானி ஆகியோர் இந்தக் கடன் உதவியால், இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்றுச் சாதனைச் சிகரங்கள் தொட்டவர்கள்*.
1893. மே 31. இளைஞர்களைத் தட்டிக் கொடுக்கும் டாடாவின் இந்த முயற் சிக்குக் கிடைத்தது ஒரு உற்சாக டானிக். ஜப்பானிலிருந்து அமெரிக்கா போகும் கப்பல். பாரதத் திருநாட்டின் இரண்டு சரித்திர நாயகர்கள் சந்தித்தார்கள். அவர்களுள் ஒருவர், “ஆற்றல் படைத்த நூறு இளைஞர்களைத் தாருங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்” என்று உத்வேக முழக்கமிட்ட சுவாமி விவேகானந்தர். உலக மதங்களின் பாராளுமன்றக் கூட்டத்துக்காகச் சிகாகோ போய்க்கொண்டிருந்தார். மற்றவர், தாயகத்தைத் தொழிற்சாலைகளின் ஆலயமாக்கவேண்டும், இளைஞர் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த டாடா. இருவரின் கருத்துகளின் சங்கமம். அறிவு ஆற்றல் நிறைந்த நூறு இளைஞர்களையல்ல, பல்லாயிரம் இளைஞர்களைப் பட்டை தீட்டும் உறுதியெடுத்தார் டாடா.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பாணியில், அறிவியல் கல்வி, தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றில் தேர்ச்சி தரும் கல்விக்கூடம் அமைக்க முடிவெடுத்தார். தன் உதவியாளர் ஒருவரை இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்பினார். இவர் பதினெட்டு மாதங்கள் பல்கலைக் கழகங்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள் ஆகியோரைச் சந்தித்தார். கல்விக் கோயிலுக்கு அற்புதமான வடிவமைப்பை உருவாக்கினார். திட்டத்தைச் செயல் வடிவாக்க டாடா 30 லட்சம் வழங்கினார். இந்தியக் கல்வி மேதைகள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் குழுவை அமைத்தார். இந்தக் குழு பல மாநிலங்களைத் தொடர்பு கொண்டது. மைசூர் மகாராஜா பெங்களூருவில் பரந்த நிலப்பரப்பை ஒதுக்கினார். பணம் ரெடி, இடம் ரெடி. இங்கிலாந்து அரசாங்கம் அனுமதி தரவேண்டும். கனவு எட்டும் தூரத்தில்.
ஆனால், இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக இந்தியாவை ஆண்ட கர்சன் பிரபு பூசைவேளைக் கரடியானார். படிக்க மாணவர்கள் இருப்பார்களா, அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்றெல்லாம் இடக்கு மடக்குக் கேள்விகள். பலன்? 1904 இல் டாடா மறைந்தார். அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், 1909 இல், இந்தியன் இன்ஸ்டிடியூட் என்னும் கல்விக் கோயில் பெங்களூருவில் எழுந் தது. கனவு நிறைவேறுமா என்னும் ஆதங்கத்தோடு டாடாவை அமரராக்கிய புண்ணியவான் கர்சன் பிரபு.
1899. டாடாவுக்கு வயது 60. ஜாரியா (இன்றைய ஜார்க்கன்ட் மாநிலம்) என்னும் இடத்தில் உருக்கு தயாரிப்புக்குத் தோதான கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; இதேபோல் சந்தா (மத்தியப் பிரதேசம்), தமிழ்நாட்டு சேலம் ஆகிய இரும்புத் தாதுக்களும் உருக்கு தயாரிப்பதற்கு ஏற்றவையாகக் கணிக்கப்பட்டன.
இந்த நொடிக்காகத்தானே, இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தார் டாடா? தாதுப் பொருட்களின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு ஜெர்மனிக்குப் போனார். தாதுக்கள் தரமானவை என்று நிபுணர்கள் அங்கீகாரம் தந்தார்கள். அங்கிருந்து இங்கிலாந்து போனார். தொழிற்சாலை தொடங்கவும், சுரங்கங்களைப் பயன்படுத்தவும் பிரிட் டீஷ் அரசாங்கத்தின் சம்மதம் வாங்கி னார். அன்றைய காலகட்டத்தில், இந்த நாடுகளுக்கான கடற்பயணமே மூன்று, நான்கு வாரங்கள் எடுக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்போதுதான், டாடாவின் செயல்பாடுகள் பிரம்மப் பிரயத்தனங்கள் என்று புரியும். இந்த முயற்சிகள் நான்கு வருடங்கள் எடுத்தன.
அன்று அமெரிக்காதான் உருக்கு உற்பத்தித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் நின்றது. டாடா அமெரிக்கா போனார். உலக மகா பணக்காரர்கள் மட்டுமே நடத்தமுடிந்த தொழிலில் ஒரு இந்தியர் நுழையப் போகிறாரா என்று சந்தேகத்தோடும், ஏளனத்தோடும் அமெரிக்கத் தொழில் அதிபர்களும், ஊடகங்களும் டாடாவைப் பார்த்தார்கள். டாடா ஆறு வாரங்கள் அங்கே சுற்றுப்பயணம் செய்தார். சுரங்கங்கள், உருக்கு ஆலைகள் என அனுமதி கிடைத்த இடங்களிலெல்லாம் நுழைந்து, கூர்ந்து கவனித்து, கேள்விகள் கேட்டுத் தன் அறிவை விசாலமாக்கிக் கொண்டார்.
அதே சமயம், அமெரிக்காவின் குறைபாடுகளைக் கவனிக்க அவர் தவறவில்லை. புகை, தூசி நிறைந்த வையாக, சுகாதாரமற்ற வையாக அமெரிக்க உருக்கு ஆலைகள் இருந் தன. அவருக்கு லாபத்தை விடத் தொழி லாளர் நலம் முக்கியம். இதனால், அமெரிக்காவிலிருந்து மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் - நாம் அமைக்கப்போகும் தொழிற்சாலையில், அகன்ற வீதிகள் இருக்கவேண்டும். அவற்றின் ஓரத்தில் வரிசை வரிசையாகத் துரித காலத்தில் வளரும் நிழல்தரும் மரங்கள் நடவேண்டும். புல்வெளிகள், பூங்காக்கள், கால் பந்து, ஹாக்கி மைதானங்கள், இந்துக் கோவில்கள், முஸ்லிம் மசூதிகள், கிறிஸ் தவத் தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு இடம் ஒதுக்கவேண்டும். லாபங்களைத் தாண்டி, சுற்றுப்புறச்சூழல், மத நல்லி ணக்கம் என்று எத்தனை பரந்த மனம்?
இந்தக் கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கும்போதே, 1904 ஆம் ஆண்டுடாடா மரணமடைந்தார். மகன்கள் தந்தையின் ஆசையை நிஜமாக்கினர். 1907 இல் ஜாம்ஷெட் பூரில் உருக்காலை எழுந்தது. இதே போல், வாரிசுகள் மஹாராஷ்ராவில் கப்போலி என்னும் ஊரில் டாடா பவர் என்னும் பெயரில் இந்தியாவின் முதல் பிரம்மாண்ட நீர்மின்சக்தி நிலையம் தொடங்கினார்கள்.
உருக்கு ஆலை, நீர்மின்சக்தி நிலையக் கனவுகள் நிஜமாவதைப் பார்க்காமலேயே டாடா அமரரானார். ஆனால், அவர் நிறைவேற்றிய இன் னொரு “சபதம்”, உலக அரங்குகளில் விருந்தோம்பலுக்குத் தனி முத்திரை பதித்திருக்கும் மும்பை தாஜ்மஹால் ஹோட்டல். டாடா மும்பையில் வாட்ஸன் என்னும் ஹோட்டலுக்குப் போனார். ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அவரை உள்ளேவிட மறுத்தார் கள். அப்போது மனதுக்குள் ஒரு மெளன சபதம், இதே மும்பையில், உங்களைவிட பிரம்மாண்ட ஹோட்டல் கட்டிக் காட்டு கிறேன். 1903. பார்த்தோரைப் பிரமிக்க வைக்கும் தாஜ்மஹால் ஹோட்டல் கதவுகள் திறந்தன. பல்வேறு தொழில் துறைகளில் இந்தியா முதல் அடி எடுக்கவைத் தவர் ஜாம்ஷெட்ஜி டாடா.
*
டாடாவின் கல்வி உதவி தீபம் காலம் காலமாகப் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்திருக்கிறது. ஒரு உதாரண அனுபவம்.
கேரளத்தில் உழவூர் கிராமம். ஒரு தலித் குடும்பம். குடிசை வீடு. குடும்பத் தலைவர் ராமன் ஆயுர்வேத வைத்தியர். மாத வருமானம் இருபதே ரூபாய். ஏழு குழந்தைகள். நான்காவது குழந்தை படிப்பில் படுசுட்டி. உழவூரில் பள்ளிக் கூடமே கிடையாது. 15 கிலோ மீட்டர்கள் வயல்கள் வழியாக நடந்து பக்கத்து ஊருக்குப் போவான். குறிப்பிட்ட தேதியில் கட்டணம் கட்டாததால், தண்டனையாக வகுப்புக்கு வெளியே நிற்க வைப்பார்கள். அங்கு நின்றுகொண்டே, ஆசிரியர் சொல்லித்தரும் பாடங்களை மனதில் வாங்கிக்கொள்வான். அப்படியும் அவன்தான் முதல் மார்க் வாங்குவான்.
கல்வி உதவித்தொகை கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்தான். பி.ஏ, எம்.ஏ. இரண்டிலும் திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் முதல் இடம். உலகப் புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் அரசியல் அறிவியல் (Political Science) படிக்க விரும்பினான். அதேசமயம், தான் பரம ஏழை, வெளிநாட்டுப் படிப்பு நிறைவேறமுடியாத கானல் நீர்க் கனவு என்று மனதைத் தேற்றிக்கொண்டான். யாரோ டாடா அறக்கட்டளை பற்றி அவனுக்குச் சொன்னார்கள். யார் சிபாரிசும் இல்லாத தனக்கு எங்கே ஸ்காலர்ஷிப் கிடைக்கப்போகிறது? நம்பிக்கையே இல்லாமல் விண்ணப்பம் செய்தான். முழு ஸ்காலர்ஷிப் கொடுத் தார்கள். அவன் ஆசை நிறைவேறியது.
படிப்பை முடித்து இந்தியா திரும் பினார். வெளிநாட்டு அமைச்சகத் தில் பணிக்குச் சேர்ந்தார். தூதரா னார். “இந்தியாவின் மிகச் சிறந்த தூதர்” என்று நேருஜியால் மகுடம் சூட்டப்பட்டார். அரசியலுக்கு வந்தார். அமைச்சர், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் என்று திறமைக்குப் பல தொடர் மகுடங்கள். அவர் கே. ஆர். நாராயணன். உழவூர்க் குடிசையில் பிறந்தவரைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமரவைத்த ஊக்கசக்தி, டாடா அறக்கட்டளை.
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com