ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறி இருக்கிறது. இதனால் 3,000 இன்போசிஸ் பணியாளர்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து பிரிட்டனுக்காக புதிய வங்கி தொடங்கும் பணியில் இருந்தது. இப்போது அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித் திருக்கிறது. இந்த திட்டத்தின் முக்கியமான தொழில்நுட்பத்தை இன்போசிஸ் வழங்கி வருகிறது. திட்டத்தை கைவிட்டதால் இன்போசிஸ் ஊழியர்கள் பாதிப் படைந்திருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்திருகிறது.
3000 பணியாளர் இந்தியாவின் முக்கியமான நகரங்களிலும், லண்டனிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படமாட்டனர். இவர்களுக்கு புதிய பணி வழங்கப்படும் என இன்போசிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
இந்த திட்டம் கைவிடப் பட்டதினால் எவ்வளவு பணி யாளர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பதை கூறிய நிறுவனம், எவ்வளவு நிதி இழப்பு ஏற்படும் என்பதை கூறவில்லை. ஆனால் சந்தை வல்லுநர்களின் கணிப்பு படி, 4 கோடி டாலர் இருக்கும் என கணித்திருக்கின்றனர். இதன் காரணமாக 2016-17 ஆண்டில் வருவாய் மேலும் குறையும் கணித்திருக்கின்றனர்.
இது ஐந்து வருட திட்டமாகும். இதற்காக 30 கோடி யூரோ நிதி ஒதுக்கி இருந்தது ராயல்பேங்க் ஆப் ஸ்காட்லாந்து. இதில் ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்தாலும் பெரும்பான்மையான தொகை இன்போசிஸ்க்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இன்போசிஸ் மற்றும் ஆர்பிஎஸ் இடையே 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐடி சேவைகள் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 18 சதவீதம் இங்கிலாந்தில் இருந்து வருகிறது.
இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா வரும் 2020-ம் ஆண்டு 200 கோடி டாலர் வருமானம் என்னும் இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார். இந்த நிலையில் ஆர்பிஎஸ் திட்டம் கைவிட்டுபோனதை அடுத்து மாற்று திட்டத்தை கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் சிக்கா இருக்கிறார்.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 1.01 சதவீதம் சரிந்து 1,051 ரூபாயில் முடிவடைந்தது.