கடந்த நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தங்கம் இறக்குமதி 24 சதவீதம் சரிந்து 2,300 கோடி டாலராக இருக்கிறது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 3,071 கோடி டாலராக தங்கம் இறக்குமதி இருந்தது.
உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்ததுதான் இதற்கு காரணம் என இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 9,520 கோடி டாலராக இருக்கிறது. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் 11,430 கோடி டாலராக இருந்தது.
ஆனால் மாதாந்திர அடிப்படையில் கடந்த பிப்ரவரியில் தங்கம் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 140 கோடி டாலர் அளவில் இருந்த தங்கம் இறக்குமதி கடந்த பிப்ரவரியில் 348 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது.
2014-15-ம் நிதி ஆண்டில் 915.47 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல 2015-16-ம் நிதி ஆண்டில் 968.06 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் ஜனவரி வரையில் 560.32 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது தங்கம் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை குறைக்க இந்த துறையை சேர்ந்தவர்கள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.