வணிகம்

இந்திய சந்தையில் 40% இடத்தை வசப்படுத்திய சீன ஸ்மார்ட்போன்கள்

பிடிஐ

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சுமார் 40% இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை தங்கள் வசப்படுத்தியுள்ளன. இந்தியா இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு தகவல் கார்ப்பரேஷன் (IDC) சுமார் 30 இந்திய முக்கிய நகரங்களில் நடத்திய ஆய்வுகளின் படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு 3-ம் காலாண்டில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்குப் பிறகு லெனோவோ அதிக அளவில் இந்தியாவுக்கு ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ளது. ஸியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம் 10.7% சந்தைப் பகிர்வு கொண்டுள்ளது. மொத்தத்தில் சீன ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் 40% சந்தையை தங்கள் வசம் வைத்துள்ளன என்கிறது ஐடிசி ஆய்வறிக்கை.

இதனையடுத்து இந்திய உள்நாட்டு செல்போன் தயாரிப்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனை ஒப்பீட்டு அளவில் 16.7% குறைந்துள்ளது.

1.34 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவை மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ‘புதிய சீனா’ என்று பார்ப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சந்தையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி இருந்தாலும் விலை நிர்ணயப் போர் அதிபோட்டித் தன்மையில் சென்று கொண்டிருக்கிறது. சராசரியாக ஸ்மார்ட் போன் விலை 100 டாலர்கள் என்பதாகவே உள்ளது. மோட்டரோலா உயர்மட்ட சந்தையைக் குறிவைக்க, லெனோவோ நிறுவனம் கீழ்மட்டச் சந்தையைக் குறிவைத்து பயன்கண்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நுபியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நி ஃபெய் தெரிவிக்கும் போது, “சீன வாடிக்கையாளர்களை விட இந்திய வாடிக்கையாளர்கள் விலையை அதிகம் கவனிப்பவர்களாக உள்ளனர்” என்றார்.

போட்டியினால் ஏற்படும் விலை நிர்ணயப் போர், காப்புரிமை மற்றும் கட்டணம் ஆகியவையும் இந்தியச் சந்தையில் பெரிய சவாலாக உள்ளதாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான அப்போ, விவோ, ஸியோமி ஆகிய நிறுவனங்களை மேற்கோள் காட்டி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போ நிறுவனம் 1.5 பில்லியன் யுவான் (சுமார் 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொகையை இந்தியாவில் தொழிற்பூங்கா அமைக்க முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே அப்போவிற்கு கிரேட்டர் நொய்டாவில் தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT