வணிகம்

ஜிஎஸ்டி-யை தாமதப்படுத்த நினைப்பவர்கள் வரி ஏய்ப்பாளர்களே: தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ் கருத்து

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தை தாமதப்படுத்த நினைப்பவர்கள் வரி ஏய்ப்பாளர்கள்தான் என்று தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ் தெரிவித்துள்ளார்.

தொழில் துறையில் சில பிரிவினர் ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஜூலை 1-ம் தேதிக்குப் பதில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதற்கு அனைவருக்குமே போதிய கால அவகாசம் உள்ளது. முன்பு இது ஏப்ரல் 1 முதல் என கூறப்பட்டது. தற்போது ஜூலை 1 முதல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஜிஎஸ்டி அமலாக்கத்தை அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து செயல்படுத்தலாம் என கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது கேலிக் குரியதாகப்படுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கோத்ரெஜ் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, முந்தைய வரி விதிப்பு முறைகள் செப்டம்பரில் காலாவதியாகின்றன. இதனால் இதை மேலும் காலதாமதப்படுத்தக் கூடாது. பல்வேறு காரணங்களுக்காக இந்த வரி விதிப்பு முறையை தள்ளிப்போட நினைப்பவர்கள் அனைவருமே வரி ஏய்ப்பாளர்கள்தான். இதன் மூலம் அவர்கள் வரி வரம்புக்குள் வருவதைத் தள்ளிப்போட நினைக்கிறார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏதேனும் மிகப் பெரிய சவால்கள், பிரச்சினைகள் உள்ளனவா என்ற கேட்டதற்கு, `` பெரிய அளவில் பிரச்சினை ஏதும் கிடையாது’’ என்றார். இதற்கு எதிர்ப்பான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், எனக்குத் தெரிந்தவரை இதைத் தாமதப்படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே வரி ஏய்ப்பு செய்பவர்களாகத்தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி-யை அமல்படுத்து வதால் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றார். மேலும் முதலாவதாக மறைமுக வரி விதிப்பில் நடைபெறும் வரி ஏய்ப்பு முற்றிலுமாக ஒழியும். இதனால் அரசின் வரி வருமானம் உயரும் என்றார்.

கடந்த காலங்களைவிட இப் போது வரி விதிப்பு அளவு குறை வாக இருக்கும். இது உற்பத்தி யாளர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகுந்த பயனளிக்கும். ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.5 சதவீதம் முதல் 2 சதவீத அளவுக்கு உயரும்.

தற்போது ஜிஎஸ்டி முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 5, 12, 18, 28 சதவீத வரி விதிப்பு முறைகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை. இதுகுறித்து கடுமையாக எதிர்ப் போர் இதை சரிவர புரிந்து கொள்ள வில்லை என்றே கருதுகிறேன். எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி என்ற விவரம் மே மாதத்தில் வெளியாகும் என்று கோத்ரெஜ் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT