உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் இந்தி திரைப்பட நடிகையான தீபிகா படுகோன் இடம்பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் தீபிகா படுகோன் 10-வது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சம்பளம் 10 மில்லியன் டாலர்.
பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்கர் விருது பெற்ற ஜெனிபர் லாரன்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெனிபர் அனிஸ்டான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் தீபிகா படுகோன் 10-வது இடத்தை பிடித்துள்ளார். தீபிகா படுகோன் நட்சத்திர நடிகையாக உருவாகி வருகிறார் என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் தீபிகா படுகோன் நடித்து வெளியான பாஜிராவ் மஸ்தானி, பிகு போன்ற திரைப்படங்கள் போன்றவை மிகப் பெரிய அளவில் வசூலில் சாதனையை படைத்துள்ளதாக போர்ப்ஸ் கூறியுள்ளது. இவரது சம்பளம் 10 மில்லியன் டாலர்.
30 வயதை உடைய தீபிகா படுகோன் பெங்களூருவில் பிறந்தவர். 2007-ம் ஆண்டு ஷாருக்கானோடு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர். அவர் நடித்த பல்வேறு படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை அடைந்தன. மேலும் அவர் சொந்தமாக ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தையும் நடத்தி வருகிறார். தற்போது ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் தீபிகா படுகோன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியாவில் திரைத்துறையில் சம்பளம் வழங்குவதில் பாலின பாகுபாடு இருப்பதாக போர்ப்ஸ் கூறியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகருக்கு 5 மில்லியன் டாலர் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நட்சத்திர நடிகைக்கு 1 மில்லியன் டாலர் மட்டுமே வழங்கப்படுகிறது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வருடமாக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார். இவரது சம்பளம் 46 மில்லியன் டாலர். கோஸ்ட் பஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்த மெலிசா மெக்ஹார்தி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சம்பளம் 33 மில்லியன் டாலர்.
ஸ்கார்லெட் ஜோஹென்ஸன் மூன்றாவது இடத்திலும் அனிஸ்டான் நான்காவது இடத்திலும் உள்ளனர். சீன நடிகையான பான் பிங்பின் ஐந்தாவது இடத்திலும் எமி ஆடம்ஸ் 7-வது இடத்திலும் ஜுலியா ராபர்ட்ஸ் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.
2015-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை முதல் பத்து இடங்களை பிடித்துள்ள நடிகைகளின் மொத்த சம்பளம் 205 மில்லியன் டாலர்.