டிசம்பர் மாத மோட்டார் சைக்கிள், கார் விற்பனையில் ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டது. சில நிறுவனங்களின் விற்பனை அதிகரித்தும், சில நிறுவன தயாரிப்புகளின் விற்பனை சரிவையும் சந்தித்தன.
மாருதி சுஸுகி
நாட்டில் அதிக அளவு கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் டிசம்பர் மாத விற்பனை 4.4 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிறுவனம் 90,924 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு (2012) டிசம்பரில் இந்நிறுவனம் 95,145 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் இந்நிறுவனம் 85,613 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதம் அதிகமாகும். ஏற்றுமதி 67 சதவீதம் சரிந்து 4,311 ஆக இருந்தது.முந்தைய ஆண்டு 13,072 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஹூன்டாய்
இந்நிறுவனத்தின் கார் விற்பனை டிசம்பர் மாதத்தில் 2.58 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 49,069 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இந்நிறுவனம் 47,833 கார்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் இந்நிறுவன விற்பனை 6.24 சதவீதம் அதிகரித்து 28,345 ஆக உயர்ந்தது. ஏற்றுமதி 1.94 சதவீதம் குறைந்து 20,724 ஆக இருந்தது.
மஹிந்திரா
இந்நிறுவனத்தின் கார் விற்பனை 12.55 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 39,611 வாகனங்களே விற்பனையாயின. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 45,297 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு விற்பனை 36,881 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 42,307 ஆகும். நிறுவன ஏற்றுமதி 8.69 சதவீதம் சரிந்து 2,730 கார்களாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 2,990 வாகனங்ள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஃபோர்ட்
இந்நிறுவன கார் விற்பனை டிசம்பரில் 2.84 சதவீதம் அதிகரித்து 11,209 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 10,899 கார்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு விற்பனை 9.9 சதவீதம் சரிந்து 5,871 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இது 6,517 ஆக இருந்தது. ஏற்றுமதி 21.8 சதவீதம் உயர்ந்து 5,338 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு மொத்தம் 4,382 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
டொயோடா
இந்நிறுவன கார் விற்பனை டிசம்பரில் 12.21 சதவீதம் சரிந்தது. மொத்தம் 12,622 கார்கள் விற்பனையாயின. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 14,378 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. உள்நாட்டில் 10,648 கார்களை விற்பனை செய்திருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் சரிவாகும். முந்தைய ஆண்டு 12,071 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மொத்தம் 1,974 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.
ஜெனரல் மோட்டார்ஸ்
இந்நிறுவனத்தின் கார் விற்பனை டிசம்பரில் 19.27 சதவீதம் சரிந்தது. மொத்தம் 5,705 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 7,067 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.