அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக நிகெல் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பொறுப்பை வகித்து வந்த ஜோகிந்தர் சிங் அமெரிக்காவில் உள்ள ஆலையில் உத்திகள் வகுக்கும் பிரிவின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிகெல் ஹாரிஸ், ஏற்கெனவே இந்திய ஆலையில் விற்பனை மற்றும் சேவைப் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். புதிய பொறுப்பை அவர் பிப்ரவரி 1-ம் தேதி ஏற்க உள்ளார். ஆட்டோ எக்ஸ்போ பிப்ரவரி 5-ம் தேதி கிரேட்டர் நொய்டாவில் தொடங்க உள்ள நிலையில் இத்தகைய மாற்றத்தை ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குர்காவ்னில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து நிகெல் செயல்படுவார். இவர் அன்றாட தகவல்களை ஆசிய பிரிவு தலைவர் டேவிட் ஷோச்சுக்கு தெரிவிக்க வேண்டும்.
1985-ம் ஆண்டு நியூஸிலாந்தில் உள்ள போர்டு ஆலையில் பணியைத் தொடங்கிய நிகெல், ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.