ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் வோல்வா நிறுவனங்கள் கூட்டாக இணைந்து 11 புதிய வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. புரோ சிரீயஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த வாகனங்கள் 5 முதல் 49 டன் திறன் கொண்டவையாக இருக்கும். இந்த புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் தன்னுடைய சந்தை பங்களிப்பை 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அதிகரிக்க முடியும் என்று நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தார்கள். கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தபட்ட இந்த வாகனங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் சந்தைகள் அறிமுகமாக இருக்கின்றன.
பிப்ரவரியில் இந்த வாகனங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், இதன் விலைகளை குறித்து எந்தவிதமான கருத்தும் இப்போது தெரிவிக்க இயலாது என்று வி.இ. கமர்சியல் வெகிக்கல்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. வினோத் அகர்வால் தெரிவித்தார். இருந்தாலும் தற்போது சந்தையில் இருக்கும் இதே திறனுடைய ஐஷர் வாகனங்களை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் என்றாலும், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட பல சாதகமான விஷயங்கள் இந்த வாகனத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருக்கிறது, மேலும் சமீபகாலங்களில் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவடைந்திருக்கிற இந்த நிலைமையில் புதிய வெளியீடுகள் அவசியமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது ஒரு கடன் இல்லாத நிறுவனம், மேலும் மோசமான காலத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில், சூழ்நிலைகள் மேம்பட ஆரம்பித்தவுடன் சந்தையை கையகப்படுத்தலாம் என்று ஐஷர் மோட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்தார்.
மேலும், சொந்தமாக விற்பனை மையங்களை அமைப்பதைவிட, டீலர்கள் மூலம் விற்பனை செய்வதில்தான் அதிக ஆர்வமாக இருப்பதாகவும் சித்தார்த் தெரிவித்தார். அதே சமயத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் அதே சமயத்தில் இலங்கையிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், டீசல் விலை உயர்வை நாங்கள் விரும்ப வில்லை என்றும் தெரிவித்தார்.
49 டன் திறன் உள்ள டிரக்குகள் தயாரிப்பதன் மூலம் உங்களுடைய விற்பனை பாதிக்காதா என்று கேட்டதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது என்று வி.இ.கமர்ஷியல் வெகிக்கல்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ. வினோத் அகர்வால் தெரிவித்தார்.