நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (சிஏடி) குறைப்பதற்கு எந்த இலக்கையும் அரசோ ரிசர்வ் வங்கியோ நிர்ணயிக்கவில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா மக்களவையில் தெரிவித்தார்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 8,000 கோடி டாலரிலிருந்து 6,000 கோடி டாலராக்கு கீழே குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இதுவரை கூறிவந்த நிலையில் இணையமைச்சர் மக்களவையில் இத்தகவலைத் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி ஒன்றுக்கு அளித்து எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியது:
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க எந்தவித இலக்கும் நிர்ணயிக்கவில்லை, இருப்பினும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், குறைப்பதற்குத் தேவையான கொள்கை மாற்றங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் பற்றாக்குறையைக் குறைக்கும் வேலையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. அதேசமயம் அரசு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது. தேவையற்ற இறக்குமதிகளையும் கட்டுப்படுத்தியது. இது தவிர கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் (2013-14) இரண்டாம் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 520 கோடி டாலராக இருந்தது. முதல் காலாண்டில் 2,180 கோடி டாலராக இருந்தது என்று மீனா குறிப்பிட்டார்.
நாட்டிலிருந்து அன்னியச் செலாவணி வரத்தை விட அதிக அளவில் வெளியேறும்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 5,600 கோடி டாலராக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இது 8,820 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பண வீக்கம் அதிகரித்ததன் காரணமாக சேமிப்பு அளவு குறைந்ததது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
2010-11-ம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்த சேமிப்பு ரூ. 18.32 லட்சம் கோடியாகும். இது 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 20.03 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் 2011ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் சேமிப்பு 23.5 சதவீதமும், 2012-ம் நிதி ஆண்டில் 22.3 சதவீதமும் குறைந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் சேமிப்பு அளவை அதிகரிக்கச் செய்யும் முயற்சியும் எடுக்கப்படுகிறது என்றார். நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 11.24 சதவீதமாக உயர்ந்தது. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
கடன் அட்டை தொடர்பாக 3,763 புகார்கள்
வங்கிகள் அளிக்கும் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மீதான புகார்கள் இதுவரை 3,753 வந்துள்ளாக அமைச்சர் நமோ நாராயண் மீனா கூறினார். 2012-13-ம் நிதி ஆண்டில் 7,744 புகார்கள் வந்தன. 2011-12-ம் நிதி ஆண்டில் 5,146 புகார்கள் பதிவாயின என்றும் அவர் கூறினார்.
ரியல் எஸ்டேட் துறைக்கு வங்கிகள் அளித்துள்ள கடன் தொகை ரூ. 6.39 லட்சம் கோடி என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல பொதுத்துறை வங்கிகள் பரஸ்பர நிதியம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள தொகை 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 44,713 கோடி என்றார்.