வணிகம்

பங்குச்சந்தையில் தொடர் சரிவு

செய்திப்பிரிவு

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 20851 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 6211 புள்ளியில் முடிவடைந்தது.

ஆனால் பி.எஸ்.இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.6 சதவீத அளவுக்கு உயர்ந்தன. ஆரம்பத்தில் 150 புள்ளிகளுக்கு மேலே சென்செக்ஸ் சரிந்தாலும் மதியத்துக்கு பிறகு ஏற்றம் பெற்று 37 புள்ளிகள் சரிந்து முடிந்தன.

தற்போதைய நிலையில் சந்தையில் ஏற்றத்துக்கான காரணங்கள் ஏதும் இல்லை. வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர இருக்கிறது. மேலும் ஜனவரி 28-ம் தேதி நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆகியவை சந்தையின் போக்கினை மாற்றும் காரணிகளாக இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பிரதமர் வெள்ளிக்கிழமை பத்திரிகை யாளர்களை சந்தித்த உரையும் சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாக இருக்கவில்லை.

ஆயில் அண்ட் கேஸ், பவர், மெட்டல், கேபிட்டல் குட்ஸ் உள்ளிட்ட துறைகள் சரிவுடன் முடிவடைந்தன. அதே சமயம் ஐ.டி துறை 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் சந்தையின் சரிவுக்கு காரணமாக இருந்தன. ஆனால் அதே சமயம், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். ஹெச்.டி.எஃப்.டி. வங்கி உள்ளிட்ட 11 பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்தன.

ஆட்டோமொபைல் துறையின் டிசம்பர் மாத விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதால் டாடா மோட்டார்ஸ் பங்கு 2.7 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கு 3.7 சதவீதமும் சரிந்தன. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்கு 1 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. எம்.சி.எக்ஸ் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓவை மூன்று வருடத்துக்கு நியமித்தன் காரணமாக எம்.சி.எக்ஸ் மற்றும் ஃபைனான்ஸியல் டெக்னாலஜி ஆகிய பங்கு 18 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்தன.

ரூபாய் சிறிதளவு உயர்வு

வெள்ளிக்கிழமை வர்த்த கத்தின் இடையே ஒரு மாதத்துக்கு முந்தைய மதிப்பை உடைத்து ஒரு டாலர் 62.56 ரூபாய் என்ற நிலைக்கு ரூபாய் மதிப்பு சென்றது. ஆனால் வர்த்தகத்தின் இடையே ரிசர்வ் வங்கியின் தடுப்பு நடவடிக்கை இருக்க கூடும் என்ற அச்சம் காரணமாக ரூபாய் மதிப்பு சிறிதளவு உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 62.16 ரூபாயாக முடிந்தது.

SCROLL FOR NEXT