வணிகம்

இந்தியாவில் விற்பனையை நிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு: புணே ஆலையை ஏற்றுமதிக்கு பயன்படுத்த திட்டம்

பிடிஐ

நடப்பாண்டுக்கு பிறகு இந்தியாவில் கார்களை விற்கும் திட்டம் இல்லை என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. குஜராத் ஆலையை மூடிய சில வாரங்களில் இத்தகைய முடிவை இந்த நிறுவனம் எடுத்திருக்கிறது. அதே சமயம் புணேயில் இருக்கும் ஆலையை ஏற்றுமதிக்கு பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் கார்களை தென் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் இந்த நிறுவனம் இருந்தாலும் இங்கு பெரிய தாக்கத்தை நிறுவனத்தால் உருவாக்க முடியவில்லை. மொத்த கார் விற்பனையில் ஒரு சதவீதத்துக்கு கீழ் இந்த நிறுவனத்தின் பங்கு இருக்கிறது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உடன் கூட்டு நிறுவனமாக இணைந்து 1995-ம் ஆண்டில் இந்திய சந்தையில் ஜெனரல் மோட்டார்ஸ் நுழைந்தது. ஒபெல் என்னும் பிராண்டை அறிமுகம் செய்தது. இந்தியாவில் பத்மினி, மாருதி உள்ளிட்ட கார்கள் விற்பனையாகி இருந்த இந்திய சூழலுக்கு முற்றிலும் புதுமையாக இந்த பிராண்ட் இருந்தது.

ஆனால் ஹூண்டாய், டொயோடா ஆகிய நிறுவனங்கள் அளவுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் துரிதமாக செயல்படவில்லை. சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய மாடல்களை இந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்தன.

2008-ம் ஆண்டு சர்வதேச மந்தநிலை உருவான பிறகு, ஜெனரல் மோட்டார்ஸின் தாய் நிறுவனத்தில் நிதி சிக்கல் உருவானது. அதனால் மற்ற நாடுகளில் இருக்கும் துணை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 2015 ம் ஆண்டு இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. புதிய மாடல்கள், இலகு ரக வர்த்தக வாகனங்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டாலும் எந்த மாடலும் அறிமுகம் செய்யப்படவில்லை.

இந்த நிறுவனத்தின் முக்கிய மாடல் காரான செவர்லேவின் விற்பனை பெரிய அளவில் இல்லை. கடந்த நிதி ஆண்டில் 25,823 வாகனங்கள் மட்டுமே விற்பனையாயின. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் மூன்று சதவீத சந்தையை பிடிக்க வேண்டும் என 2015-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரு சதவீத சந்தையை கூட பிடிக்க முடியவில்லை.

ஆனால் ஏற்றுமதி 37,052 (2015-16) கார்களில் இருந்து 70,969 (2016-17) கார்களாக உயர்ந்தன. இதன் காரணமாகவே இந்தியாவை ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கு இந்த நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

செவர்லே கார் வைத்திருப்பவர் களுக்கு உதிரி பாகங்கள், சேவை ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை நிறை வேற்றப்படும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT