பயோமெட்ரிக் அடையாள திட்டமான ஆதாரின் பயன்களை குறைத்து விடக்கூடாது. மாறாக இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்கும் அரசு செலவிடும் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை முழுமை யாகப் பயன்படுத்த வேண்டும் மத்திய நிதித்துறை செயலர் அசோக் லாவசா தெரிவித்துள்ளார்.
ஆதார் திட்டத்தின் மூலம் ஒவ் வொருவருக்கும் 12 இலக்கங்கள் கொண்ட எண் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 99 சதவீத பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு விட்டது. இந்த ஆதார் எண் 84 அரசு திட்டங்களோடு இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் பண பரிமாற்றம் செய்வதற்கும் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அசோசேம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அசோக் லாவசா கலந்து கொண்டு பேசியதாவது: ஆதார் என்ற ஒற்றை அடையாள எண் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதார் என்பது புரட்சிகரமான திட்டம். ஆதார் எண் செய்த வேலைகளை உலகில் எந்தவொரு திட்டமும் செய் திருக்க முடியாது. 105 கோடி மக்க ளுக்கும் தனித்தனியான அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகள் கூட ஆதார் அடையாள அட்டை மூலமாக ஈர்க்கப்பட்டு அந்த நாட்டுக் குடிமக்களுக்கு அடையாள அட்டையை வழங்கிவருகிறது. இருந்தபோதிலும் ஆதார் என்பது தனித்துவமாக இருந்து வருகிறது.
ஆதார் எண்ணுக்கு நிறைய செயல்பாடுகளை மாற்றும் வலிமை உள்ளது. ஆதார் எண்ணின் பயன் களைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இது மிகவும் முக்கிய மானது. அரசு செலவிடும் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஊழல் இல்லா நிர்வாகத்தையும் வெளிப்படையான நிர்வாகத்தை யும் கொண்டுவர முடியும்.
நேரடி மானியத்திட்டம் போன்ற அரசின் திட்டங்களோடு ஆதார் எண்ணை இணைத்தது மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இது நல்ல மாற்றத்தையும் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு அசோக் லாவசா தெரிவித்தார்.
பின் தங்கிய மக்களை மேம் படுத்துவதற்கு அரசு செய்துவரும் திட்டங்களுக்கு ஆதார் எண் மிகப் பெரிய உதவியாக உள்ளது என்று உலக வங்கி 2016-ம் ஆண்டு வெளியிட்ட உலக மேம்பாட்டு அறிக்கை கூறியுள்ளது.
மேலும் ஆதார் எண் தற்போது வருமான வரித்தாக்கல் மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல், புதிய சிம் கார்டு வாங்குவது போன்றவற்றுக்கு கட்டாயமாக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடி மானியத் திட்டத்தால் ரூ.34,000 கோடி சேமிப்பு
மத்திய அரசின் நேரடி மானியத் திட்டங்களால் ரூ.34,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அசோக் லாவசா தெரிவித்துள்ளார்.
``மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு மானியத்தை நேரடியாக வழங்குவதன் மூலம் இந்த தொகை சேமிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மத்திய அரசின் 78 திட்டங்களுக்கு நேரடி மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மானியத்தை நேரடியாக வழங்கியதன் மூலம் ரூ.34,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது’’ என்று லாவசா தெரிவித்தார்.