சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) நிர்ணயம் செய்யப்பட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்ற அசோசேம் விழாவில் இதனை அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: திட்டமிட்டபடி ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதன் மூலம் தொழில் புரிவது எளிதாகும். ஜிஎஸ்டி வரி, வரி விலக்கு அளிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கும் என்று கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதுடெல்லி விக்ஞான் பவனில் நேற்று கூடியது. இரு நாட்கள் நடக்கும் கூட்டம் இன்று நிறைவடைகிறது. மத்திய நிதி அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. நிதி துறை இணையமைச்சர்கள், வருவாய் துறைச் செயலாளர் ஹஷ்முக் ஆதியா மாநில நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
ஜிஎஸ்டி சட்ட வரைவை நவம்பரில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்காக நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை கடந்த 14-ம் தேதி பிரதமர் மோடி நடத்தினார்.