மத்திய நிதித்துறைச் செயலராக இருந்த அர்விந்த் மாயாரம் அப்பொறுப்பிலிருந்து சுற்றுலா அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செயலர்கள் நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மாறுதல் இதுவாகும்.
நிதித்துறைச் செயலர் பொறுப்பில் இருந்த அர்விந்த் மாயாராம் இப்போது பிரபலமில்லாத சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிதி அமைச்சகத்தில் உள்ள நான்கு செயலர்களில் மிகவும் மூத்த அதிகாரியான அர்விந்த் மாயாராம் நிதித்துறைச் செயலர் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராகவும் இரண்டு பொறுப்புகளை வகித்து வந்தார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் சுற்றுலா அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டு சுற்றுலாத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்குப் பதிலாக தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமைச் செயலராக உள்ள ராஜிவ் மெஹ்ரிஷி நியமிக்கப் பட்டுள்ளார். இவரும் அர்விந்த் மாயாராமும் ஒரே ஆண்டில் ஐஏஎஸ் தேர்வு பெற்றவர்கள். இவர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார். இவருக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளது. புதன்கிழமை இரவு 20 பேருக்கு பதவி மாற்றப்பட்டது. இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் செயலர்கள் நிலையிலான அந்தஸ்திலிருப்பவர்களாவர்.
அனில் ஸ்வரூப் நிலக்கரித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சகத்தில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரத்தன் பி வட்டாள் செலவுப் பிரிவு செயலராக உள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஜி.எஸ். சாந்து நிதி சேவை செயலராக உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ் வருவாய்த்துறைச் செயலராக உள்ளார். இவர்களில் அர்விந்த் மாயாராம் மிகவும் மூத்த அதிகாரியாவார். நான்கு பேரில் மூத்த அதிகாரி நிதிச் செயலராகக் கருதப்படுவார்.