வணிகம்

தனியார் தொலைத் தொடர்புநிறுவனங்களில் சிஏஜி தணிக்கை: டெல்லி நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆண்டு கணக்கு நிதி நிலை அறிக்கையை மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) தணிக்கை செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை திங்கள்கிழமை டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி பிரதீப் நந்திரஜோக் மற்றும் வி.கே. ராவ் ஆகியோரடங்கிய அமர்வு அளித்தது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் அரசுக்கு எந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதை சிஏஜி தணிக்கை செய்யலாம் என்று நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்திய செல்லுலர் ஆப்பரேட்டர்ஸ் சங்கம் (சிஓஏஐ) மற்றும் ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் (ஏயுஎஸ்பிஐ) நிறுவனங்கள் ஆகியன தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இத்தீர்ப்பை அளித்துள்ளனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாயை தணிக்கை செய்ய சிஏஜிக்கு உரிமை இல்லை என்று இவ்விரு சங்கங்களும் மனு தாக்கல் செய்திருந்தன.

இதை எதிர்த்து இந்திய தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து சிஏஜி மனு தாக்கல் செய்திருந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானம் எந்த அளவுக்கு அரசுக்குக் கிடைக்கிறது என்பதை தணிக்கை செய்ய வேண்டியிருப்பதாக சிஏஜி மற்றும் தொலைத் தொடர்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை ஆய்வு செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சிஏஜி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT