இன்போசிஸ் நிறுவனர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே உரசல் என்னும் செய்திகள் வெளி வந்துள்ளன. இதுபோன்ற செய்திகள் குறித்து பணியாளர்கள் கவலை கொள்ள வேண்டாம். தங்களுடைய பணியில் கவனம் செலுத்துமாறும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்தோ அல்லது இன்னும் முடிவு தெரியாமல் இருக்கும் விசா பிரச்சினைகள் குறித்தோ பணியாளர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தவும்.
நம்முடைய நிறுவனத்தை சிறந்த நிறுவனமாக மாற்றுவதில் நாம் கவனமாக இருக்கிறோம். இதில் இரண்டாம் கருத்துக்கு இடம் இல்லை. நாம் அதனை இணைந்தே மாற்றுவோம் என சிக்கா தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்காவின் சம்பளம் மற்றும் இரு உயர் அதிகாரிகள் வெளியேறிய சமயத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் இன்போசிஸ் நிறுவனர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதாக தகவல் வெளியானது.
இந்த இழப்பீடு சரியானதுதான் என்றும், நிறுவனத்தின் நலனுக்கு ஏற்பவே இந்த இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டிவி மோகன்தாஸ் பாய் கூறும்போது, நிறுவனத்தின் நலனுக்கு ஏற்ப வழங்கப்பட்டது என பொதுவாக கூறாமல் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.
கடந்த டிசம்பர் வரையில் இன்போசிஸ் நிறுவனத்தில் நிறுவனர்களுக்கு 12.75 சதவீத பங்குகள் உள்ளன.