இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப் படும் தொகையை 20 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அவ்வாறு தொகை குறைக்கப்படும் பட்சத்தில், சமை யல் எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோ பர் மாதம் கட்டண நிர்ணய விதி முறைக்கு அரசு ஒப்புதல் வழங்கி யது. இந்த தொகை குறைப்பால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற் றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங் களுக்கு அரசு கொடுக்க வேண்டிய கட்டணம் குறையும்.
தற்போது 10 லட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு (எம்பி டியூ) 3.06 டாலர் கட்டணமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை யில் 20 சதவீதம் குறைத்து 2.45 டாலர் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி 3.82 டாலர் என்ற அளவில் இருந்து 3.06 டாலராக குறைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோ பரில் கட்டணக் குறைப்பு அமல் படுத்தப்பட்டால் கடந்த 18 மாதங் களில் மேற்கொள்ளப்படும் 4-வது தொகைக் குறைப்பு இதுவாக இருக் கும். இந்த கட்டண குறைப்பின் காரணமாக சிஎன்ஜி மற்றும் வீடு களுக்கு பயன்படுத்தப்படும் எரி வாயு கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த அக்டோபர் 2014 முதல் எரிவாயு விலை 39% குறைந்திருக்கிறது.