இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஏழு ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகரித்திருக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் அதிகமாக இறக்குமதி செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1.88 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இது 9.1 சதவீதம் அதிகமாகும். கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு இறக்குமதி அதிகமாக இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான்.
கடந்த ஆகஸ்ட் மாத எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.39,030 கோடியை இந்தியா செலுத்தியுள்ளது. கடந்த வருடம் ரூ.39,024 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
நாப்தா மற்றும் மண்ணெண்ணெய் தவிர மற்ற அனைத்து வகையான எரிபொருள் தேவையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் தேவை 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
டீசல் விற்பனை 54 லட்சம் டன்னில் இருந்து 61 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. எல்பிஜி விற்பனை 20 சதவீதம் உயர்ந்து 18 லட்சம் டன்னாக உயர்ந்திருக்கிறது.