வணிகம்

டைட்டன் நிகர லாபம் 13% உயர்வு, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 4 மடங்கு உயர்வு: காலாண்டு முடிவுகள்

செய்திப்பிரிவு

டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து 255 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிகர லாபம் 226 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.3,925 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,432 கோடியாக இருந்தது.

வாட்ச் பிரிவின் மூலம் கிடைக்கும் வருமானம் 5.1 சதவீதம் உயர்ந்து ரூ.508 கோடியாக இருக்கிறது. அதேபோல ஜூவல்லரி பிரிவின் வருமானம் 15.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,255 கோடியாக இருக்கிறது. கண்ணாடி பிரிவின் வருமானம் 12.4 சதவீதம் உயர்ந்து ரூ.90.65 கோடியாக இருக்கிறது.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையிலும் மூன்றாம் காலாண்டு செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக இருக்கிறது. விழாக்காலத்தில் ஜுவல்லரி மற்றும் வாட்ச் பிரிவு வருமானம் சிறப்பாக இருக்கிறது என டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 4 மடங்கு உயர்வு

பஞ்சாப் நேஷனல் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு உயர்ந்து ரூ.207 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.51.10 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 4.36 சதவீதம் உயர்ந்து ரூ.14,497 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13,891 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 8.47 சதவீதத்தில் இருந்து 13.70 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 5.86 சதவீதத்தில் இருந்து 9.09 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 22.23 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ. 3,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது ரூ.2,935 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வங்கியின் நிகர வட்டி வரம்பு 2.75 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாக குறைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 1.6 சதவீதம் இந்த பங்கு உயர்ந்து முடிந்தது.

ஐடிபிஐ வங்கி நஷ்டம் ரூ.2,255 கோடி

பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் நிகர நஷ்டம் அதிகரித்து ரூ.2,255 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,183 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. அதேபோல வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,104 கோடியாக சரிந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 9.84 சதவீதத்தில் இருந்து 15.16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 4.60 சதவீதத்தில் இருந்து 9.61 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,205 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,722 கோடியாக இருந்தது.

டிசம்பர் 31 வரை வங்கியின் மொத்த வணிகம் ரூ.5.16 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.4.43 லட்சம் கோடியாக இருந்தது. இதில் டெபாசிட் 27.06 சதவீதம் ரூ.2.98 லட்சம் கோடியாகும். கடன் 4.31 சதவீதம் உயர்ந்து ரூ.2.19 லட்சம் கோடியாக இருக்கிறது.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் லாபம் 3 மடங்கு உயர்வு

பொதுத்துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.64 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.17 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு 2,827 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,086 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 9.57 சதவீதத்தில் இருந்து 15.98 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது ரூ.6,721 கோடியில் இருந்து ரூ.10,845 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 10.62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது ரூ.3,965 கோடியில் இருந்து ரூ.6,729 கோடியாக அதிகரித்திருக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 52 வார உச்சமாக 29.45 ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 13.85 சதவீதம் உயர்ந்து 27.95 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

SCROLL FOR NEXT