வணிகம்

ஐடிசியில் 2% பங்குகளை விற்றது மத்திய அரசு

செய்திப்பிரிவு

ஐடிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 2 சதவீதத்தை விற்றதன் மூலம் மத்திய அரசு ரூ.6,700 கோடி நிதி திரட்டி இருக்கிறது. செயல்படாத யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியாவின் சொத்துகள் மற்றும் கடன்களை கையாளுவதற்காக எஸ்யூயூடிஐ என்னும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐடிசி நிறுவனத்தின் 11.17 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

இதில் இருந்து 2 சதவீத பங்குகளை 275.85 ரூபாய்க்கு விற்றது. இதன் மூலம் ரூ.6,700 கோடி கிடைத்திருக்கிறது. இந்த பங்குகளை இந்திய ஆயூள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வாங்கி இருக்கிறது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தில் எஸ்யூயூடிஐ-க்கு உள்ள பங்கு 9.17 சதவீதமாக குறையும்.

இந்த பரிவர்த்தனையும் சேர்த்து, நடப்பு நிதி ஆண்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு பங்கு விலக்கல் மூலம் மத்திய அரசு நிதி திரட்டி இருக்கிறது.

இந்த நிதி ஆண்டில் 12 பங்கு விலக்கல்களை மத்திய அரசு செய்தது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.45,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.

ஐடிசி தவிர, எல் அண்ட் டி (6.53%) மற்றும் ஆக்ஸிஸ் வங்கி (11.53%) ஆகிய நிறுவனங்களில் எஸ்யூயூடிஐ நிறுவனத்துக்கு பங்குகள் உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த பங்குகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கியில் 9 சதவீத பங்குகள் விற்கப்பட்டது. அதே போல கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் எல் அண்ட் டியில் இருந்து 1.63 சதவீத பங்குகள் விற்கப்பட்டது.

SCROLL FOR NEXT