அமெரிக்காவின் புகழ்பெற்ற காப்பி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் குடியுரிமை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒதுங்கியும், மவுனமாகவும் இருக்க முடியாது என்றும் ஹாவர்ட் ஸ்குல்ட்ஸ் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் கூறியதாவது, "நான் ஆழ்ந்த கவலையுடனும் கனந்த இதயத்துடனும் உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறேன். நாம் முன்னெப்போதும் இல்லாத கால சூழலில் உள்ளோம். இப்போது எழுந்துள்ள பிரச்சினையில் நம் நாட்டின் மனசாட்சியாக நாம் இருக்கிறோம். அமெரிக்கர்களின் கனவுகளும், வாக்குறுதிகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, புதிய வாழ்வை ஏற்படுத்திய நீண்ட நெடும் வரலாற்றை கொண்டது.
அமெரிக்காவில் புதியதாக தலைமையேற்றுள்ள புதிய அரசால் ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படும் திட்டங்களால் நிலையற்றதன்மை உருவாகியுள்ளது. இதனை கண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஒதுங்கியும் செல்லாது மவுனமாகவும் இருக்காது என்றும் மக்களுக்கு உறுதி கூறுகிறேன்.
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 75 நாடுகளை சேர்ந்த 10,000 அகதிகளை அடுத்த 5 வருடங்களுக்கு பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
எங்களது வணிகத்தின் நோக்கமே மனித நேயத்தை வளர்ப்பது. ஒரு மனிதன், ஒரு கோப்பை, ஒரு அண்டை தேசம் என்பதே அது.
அந்த அண்டைதேசம் சிகப்பாகவும் இருக்கலாம், நீலமாகவும் இருக்கலாம். கிறிஸ்த்தவர்கள் நாடாகவோ, இஸ்லாமியர்கள் நாடகாவோ இருக்கலாம். இதில் எங்களது நிலைப்பாடு மாறாது" என்று கூறினார்.
முன்னதாக அமெரிக்க அதிபராக பதிவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை குடியுரிமைக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஹாவர்டு ஷல்ட்ஸ்?
‘ஸ்டார்பக்ஸ்’ அமெரிக்காவின் முன்னணி காபி தயாரிப்பு நிறுவனம். வாஷிங்டனின் சியாட்டிலில் 1971-ல் தொடங்கப்பட்டது. உலகமெங்கும் 23,000-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட பிரம்மாண்டமான நிறுவனம் இது. ஹாவர்டு ஷல்ட்ஸும் சாதாரணமானவர் அல்ல. அதிபர் தேர்தலுக்கான களத்தில் இருக்கிறார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்படும் அளவுக்குச் செல்வாக்கான நபர். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று இரண்டு முக்கியக் கட்சிகளுக்கும் தாராளமாக நிதியுதவி செய்தவர். ஜனநாயகக் கட்சியின் இயல்பான வேட்பாளராக அவர் இருப்பார் என்றே அப்போது பேசப்பட்டது. எனினும், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் எழுதிய கட்டுரையில் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று அவரே சொல்லிவிட்டார். இருந்தாலும், 2020 அதிபர் தேர்தலிலாவது போட்டியிடுவாரா என்று அரசியல் பார்வையாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிப்படையாக, துணிச்சலாகப் பேசக்கூடிய ஷல்ட்ஸ், அனைத்து தரப்பினரையும் ஒன்றாகக் கருத வேண்டும் எனும் தனது கொள்கைகளை, தனது நிறுவனத்தின் செயல்பாட்டிலும் பரிசோதித்துப் பார்த்தவர். சட்டமே அனுமதித்தாலும், ‘ஸ்டார்பக்ஸ்’ நிலையங்களுக்குள் தனது வாடிக்கையாளர்கள் துப்பாக்கி கொண்டுவரக் கூடாது என்று சொன்னவர். அமெரிக்காவில் அதிகரித்துவரும் இனவெறிச் சம்பவங்கள் அவரைப் பெரிதும் பாதித்தன. 2014-ல் ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய காணொலிச் செய்தியில், “ பெர்குஸன், மிசோரி, நியூயார்க் தொடங்கி ஓக்லாண்ட், கலிபோர்னியா வரை நடந்துவரும் இனவெறித் தாக்குதல் சம்பவங்களை கனத்த மனதுடன் கவனித்துவருகிறேன். இவ்விஷயத்தில் நமது கூட்டுப் பொறுப்புகள் என்ன?” என்று தார்மிகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
எளிய பின்னணி கொண்ட ஷல்ட்ஸ் பகுதி நேரப் பணி செய்துகொண்டே கல்வி பயின்றவர். இன்னும் சில மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் ஷல்ட்ஸ், அதி நவீன காபி நிறுவனங்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். ட்ரம்பின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் மெக்ஸிகோவுடனும் தனது நிறுவனத்தின் வர்த்தக உறவை மேம்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார் ஷல்ட்ஸ்.இன்னொரு முக்கியமான விஷயம் முஸ்லிம்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் ஆதரவாகப் பேசும் ஷல்ட்ஸ் ஒரு யூதர்!