வணிகம்

63 எஸ்இஇஸட் அனுமதி ரத்து?

பிடிஐ

நாட்டில் புதிதாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்) அமைக்க விண்ணப்பித்து செயல்படுத்தாத திட்டங்களை ரத்து செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி 63 எஸ்இஇஸட்-களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது.

ஜூலை 3-ம் தேதி கூட உள்ள மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கும் வாரியத்தின் (பிஓஏ) இயக்குநர் கூட்டத்தில் இந்த அனுமதியை ரத்து செய்ய உள்ளதாக வர்த்தகத் துறைச் செயலர் ரீடா தியோஷியா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்த நிறுவனங்கள் இவற்றைச் செயல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு கடிதம் எதையும் வர்த்தக அமைச் சகத்துக்கு அனுப்பவில்லை. இதனால் இத்திட்டத்தை செயல் படுத்துவதில் அந்நிறுவனங் களுக்கே விருப்பம் இல்லை என்ற முடிவுக்கு வந்து இதற்கான அனுமதியை பிஓஏ ரத்து செய்ய உள்ளது.

கேரள மாநிலத்தில் கொச்சியில் தாராள வர்த்தகம் மற்றும் கிட்டங்கி மண்டலம் (எப்டிடபிள்யூஇஸட்) அமைப்பதற்கு விண்ணப்பித்த நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை என தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு கொச்சி சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.

இதேபோல டெல்லி மாநில தொழில் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்ரேஷன் லார்க் திட்டப் பணிக்கான கால நீட்டிப்பு கோரவில்லை. மானசரோவர் தொழில் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மற்றும் டயமண்ட் ஐடி இன்பிராகான் ஆகியனவும் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் இத்திட்டத்துக்கான அனுமதியையும் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். இத்திட்டப் பணிகளை ரத்து செய்யுமாறு நொய்டா மேம்பாட்டு ஆணையர் பரிந்துரைத் துள்ளார்.

SCROLL FOR NEXT