வணிகம்

குறைவான வரி விதிப்பால் வரி ஏய்ப்பு குறையும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து எவ்வளவு வரி விகிதம் விதிக்கப்படும் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாட்டில் மிதமான வரி விதிப்பு இருக்கும்போது அதிக வரி ஏய்ப்பு குறையும் என்று தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோர்கள் அனைவரும் வரியை செலுத்திவிடும் போது வரி விகிதத்தை மேலும் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். வரியின் அளவு அதிகமாக இருக்கும்போது வரி ஏய்ப்பு அதிகமாக உள்ளது. வரி விலக்கு கோருவதும் அதிகமாக உள்ளது என்று மும்பையில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

மும்பை பாஜக பிரிவின் தலைவரான ஆஷிஷ் செலார் தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதமான 17 சதவீதத்தை கொண்டு வர வேண்டும் என்று அருண் ஜேட்லிக்கு கோரிக்கை விடுத்தார். அதில் உள்ள சிக்கல்கள் பற்றி விளக்கமளித்த அருண் ஜேட்லி, எப்பொழுதெல்லாம் அதிக மக்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறார்களோ அப்பொழுது வரி விதிப்பு முறையானது அதன் பாதையிலிருந்து விலகி சென்று விடும் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: நாடு முழுவது ஒரே வரி விகிதம் கொண்டு வரப்படும். ஒரு நபர் ஒரு நபரிடம் மட்டும் வரி செலுத்தக்கூடிய வகையில் இருக்கவேண்டும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வரி அதிகாரிகளிடம் வரி செலுத்துவது போல் இருக்கக்கூடாது. ஒரே நபரிடம் செலுத்துவது போல் இருந்தால்தான் தொழில் புரிவதற்கு எளிதாக இருக்கும்.

வருமான வரித் தாக்கல் செய்யும் பெரும்பாலனோர்களில் நிறைய பேர் வரி செலுத்துவதில்லை. நம் நாட்டில் வரி விகிதம் மிக நியாயமான முறையில் இருக்கிறது. அடுத்ததாக மறைமுக வரியும் குறைய இருக்கிறது. வரி வகுப்புகளை உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வரி செலுத்தும் இலக்கை அடைய வேண்டும். ஜிஎஸ்டியை அடுத்து அரசுக்கு முன் உள்ள சவால் பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துவதாகும். மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துவதற்கு உண்டான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதை அரசு உறுதியாக செய்யும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதையெடுத்து அஸ்ஸாம் மற்றும் பிஹார் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டது. 17 மாநிலங்களில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

நேரு, நரசிம்மராவ் பொருளாதாரக் கொள்கைகள்: அருண் ஜேட்லி விமர்சனம்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பொருளாதாரத்தை மீட்க வந்த கடவுள் என்று மக்கள் நம்பவில்லை. மேலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வளர்ச்சியை புறக்கணித்தது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் சுதந்திரத்துக்கு பிறகு நாட்டில் வளர்ச்சி ஏற்படாமல் போனதற்கு நேருவின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்றார்.

நேருவின் வளர்ச்சிக் கொள்கையால்தான் இந்தியா வளர்ச்சியடையவில்லை. கடந்த சில பத்தாண்டுகளாக வளர்ச்சி ஏற்படாமல் போனதற்கு அவரே காரணம். வளர்ச்சிக்கு அவரது பொருளாதார கொள்கைகள் உதவவில்லை. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்களே செல்போன்கள் வைத்துள்ளனர். மற்ற நாடுகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இந்தியா வளர்ச்சியடையவில்லை. ஏனெனில் நேருவின் பொருளாதார கொள்கைகளைப் பின்பற்றியதுதான் காரணம். ஆனால் சில பேர் அவரது கொள்கைகளை புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை பொறுத்தவரை இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்கு முன்னெடுத்தார் என்பதாக அவரை பார்க்கிறார்கள். அவர் பொருளாதாரத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் அனைத்தும் நிர்பந்தத்தினால் கொண்டுவரப்பட்டவை. திவால் காரணத்தினால்தான் 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இல்லையென்றால் அவர் பழமைவாதியாகத்தான் இருந்திருப்பார் என்று ஜேட்லி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT