சமீப ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் கவனிக்கத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று பன்னாட்டு நிதியத்தின் முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.எம்.எஃப். நிதிவிவகாரத் துறை இயக்குநர் வைடோர் காஸ்பர் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சமீப ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கவனிக்கத்தக்க நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள் மானியங்களை அகற்றியது மற்றும் சமூகப் பயன்களை நோக்கிச் செல்வது ஆகியவற்றினால் ஜிடிபியில் 3.5% வளர்ச்சியாக விளைந்துள்ளது.
நிதி அமைப்பு அளவுகோல்கள், அதாவது உள்கட்டமைப்பு முதலீடுகளைக் காத்தல், வரிவிதிப்புகளை விரிவு படுத்தும் முயற்சி ஆகியவற்றுடன் செலவின முறைப்படுத்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை இந்திய அதிகாரிகளுடன் நாங்களும் பணியாற்றி வருகிறோம்.
இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிச்சயமாக இந்தியாவில் ஒருங்கிணைந்த தேசிய சந்தை உருவாக வழிவகை செய்யும்.
வரிவிதிப்பு விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு இடமிருக்கிறது, வருமான வரி வருவாயில் முன்னேற்றத்துக்கான இடம் ஆகியவை குறித்தும் கவனித்து வருகிறோம்.
இந்தியாவிலும் சீனாவிலும் பணக்காரர்கள் ஏழைகளுக்கிடையே கடும் இடைவேளி நிலவுகிறது. மேலும் உலகமயமாதல், தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியை நகர்த்தும் முக்கிய அம்சங்களாகும்.
1980-களின் தொடக்கம் முதல் சுமார் 10 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலும் சீனாவிலும் இருந்தனர். ஆனால் நாட்டின் பொருளாதார அறிகுறிகளை வைத்துப் பார்க்கும் போது சீனாவிலும் இந்தியாவிலும் தான் பணக்காரர், ஏழை இடைவேளி பெரிதும் உள்ளது.
வருவாயில் சமத்துவமின்னை என்பது தேசிய அரசியல் சூழ்நிலைமைகளின் கொள்கைகளினால் உருவாவதே. நிதிக் கொள்கைகள், அரசு செலவினங்கள், வருவாய், ஆகியவை வளர்ச்சியினால் ஏற்படும் பயன்களை சமமாகக் கொண்டு செல்ல உதவும் உபகரணங்கள்.
இவ்வாறு கூறினார் அவர்.