வணிகம்

7 ஆண்டுகளில் முதல் முறை: டீசல் விற்பனை மூலம் லிட்டருக்கு 35 காசு லாபம்

செய்திப்பிரிவு

டீசல் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படாத நிலையில் டீசல் விற்பனை மூலம் லிட்டருக்கு 35 காசுகள் லாபம் கிடைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால் டீசல் விற்பனை மூலம் லாபம் கிடைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் டீசல் விற்பனையால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு லாபம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப டீசல் விலையை நிர்ணயிப்பதற்கு வசதியாக டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க அரசு முடிவு செய்தது.

ஜனவரி முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டது. 19 முறை உயர்த்தப்பட்டு லிட்டருக்கு டீசல் விலை ரூ. 11.74 உயர்ந்தது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் டீசல் விற்பனை மூலம் லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால் டீசல் விலையைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரம், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக டீசல் விலையைக் குறைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

டீசல் விலை தற்போது லிட்டர் ரூ. 58.97 (டெல்லி), ரூ. 67.26 (மும்பை), ரூ. 63.81 (கொல்கத்தா), ரூ. 62.92 (சென்னை) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலருக்கும் குறைவாக சரிந்ததால் பெட்ரோல் விலை கடந்த மாதத்தில் மூன்று முறை குறைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT