வணிகம்

இந்தியாவுக்கான தரமதிப்பீடு உயரக்கூடும்

செய்திப்பிரிவு

இந்தியாவின் மோசமான காலம் முடிந்துவிட்டது, அதனால் இந்தியாவுக்கான தரமதிப்பீடு உயர்த்தப்படும் என்று சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனமான பேங்க் ஆப் அமெரிக்கா- மெரில் லிஞ்ச் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மூடிஸ் நிறுவனம் பிரேசில் நாட்டுக்கு தரமதிப்பீடு எதிர்பார்ப்பைக் குறைத்திருக்கிறது. மேலும் வளரும் நாடுகளும் தங்களுக்காக தரமதிப்பீடு குறையக்கூடும் என்று எதிர்பார்க்கிற நிலைமையில் இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை மதிப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. 2012-ம் ஆண்டு எஸ் அண்ட் பி நிறுவனம் இந்தியாவுக்கான தரமதிப்பீட்டைக் குறைத்தது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கும் கடனுக்கு அதிக வட்டியை செலுத்த வேண்டியிருந்தது.

இப்போதைக்கு இந்தியாவின் தரமதிப்பீட்டை உயர்த்த சில காரணங்கள் இருப்பதாக பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இதற்குக் கீழே குறைய வாய்ப்பு இல்லை. பணவீக்கம் குறைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பது போன்ற காரணங்களால் மதிப்பீடு உயர வாய்ப்பு அதிகம்.

மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 58 முதல் 62 ரூபாய்க்குள் நிலைபெறும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் உயர வாய்ப்பு இருக்கிறது.

2019-ம் ஆண்டு சீனாவுக்கு அடுத்து அதிக வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் சர்வதேச சூழ்நிலைகளால் வளர்ச்சி குறையலாமே தவிர உள்நாட்டு சூழலால் வளர்ச்சி குறையாது. மோடி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் 2018-ம் ஆண்டு 7.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அமெரிக்காவின் நிலையான, கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்குள் இருப்பது, ரூபாய் மதிப்பு 60 ரூபாய்க்குள் வர்த்தகமாவது மற்றும் அரசாங்கம் எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை பார்க்கும் போது 2018-ம் ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

பணவீக்கத்தை எடுத்துக் கொண்டால் உள்நாட்டு சூழ்நிலைகளை விட டாலர் நிலவரம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய வெளிநாட்டு சூழ்நிலைகள் அதிக பங்கு வகிக்கிறது. 2016-ம் ஆண்டுக்குள் நுகர்வோர் பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித் திருக்கிறது. அடுத்த பிப்ரவரி முதல் வட்டி விகிதங்கள் குறைக் கப்படலாம். இது 0.75 முதல் ஒரு சதவீதம் வரை இருக்கக்கூடும். செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கூட பிப்ரவரியில் வட்டி குறைப்பு இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT