வணிகம்

நிலையான வளர்ச்சியை இலவசம் அளிக்காது: வெங்கய்ய நாயுடு பேச்சு

செய்திப்பிரிவு

மக்களுக்குத் தேவையானது அனைத்தையும் அரசுதான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது, இது ஆபத்தானது. இலவசங்கள் நிலையான வளர்ச்சியை அளிக்காது என திருப்பூரில் மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பேசினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு தொடக்க விழா, ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் ஐகேஎப் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு மேலும் பேசியது:

திருப்பூரில் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களால் பின்னலாடை வர்த்தக மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் 5-ல் ஒரு பங்கு திருப்பூரில் இருந்து வருகிறது என்பது வியப்பளிக்கிறது.

ஒருங்கிணைந்த, வேகமான வளர்ச்சியே மக்களுக்குத் தேவை. இதற்கு அரசுடன் மக்களும், பொதுத்துறை நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்களுக்கு பயிற்சியும், வாய்ப்பும் அளிக்க வேண்டியது தான் இன்றைய காலகட்டத்தின் அவசியம். அதுதான் தேவை. இதற்கு, திருப்பூர் மக்கள்தான் சரியான உதாரணம்.

புதுடெல்லி திரும்பியதும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிதித்துறை அமைச்சரிடம் பேசி பரிசீலிப்போம்.

இன்னும் 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மிகச் சிறப்பானதாக இருக்கும். இதில் எவ்வித ஐயமும் இல்லை. மோடி ஆட்சியில், முதல் காலாண்டு வளர்ச்சி 5.7 சதவீதம் என்பது நல்ல செய்தி என்றார்.

SCROLL FOR NEXT