கெய்ர்ன் இந்தியா நிறுவனம் ராஜஸ்தானில் மூன்று எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள எண்ணெய் அகழ்வில் 3 பகுதிகளில் எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்துள்ளது.
பார்மர் பகுதியில் ஆர்ஜே 90/1 எண்ணெய் படுகையில் 3 இடங்களில் எண்ணெய் இருப்பது துரப்பணப் பணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிபி-1 என்ற பகுதியில் 70 மீட்டர் ஆழத்தில் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு 120 பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மங்களா எண்ணெய் வயலுக்கு வடக்குப் பகுதியில் 6 கீ.மீ. தூரத்தில் இப்புதிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மங்களா எண்ணெய் வயலின் மொத்த வரப்பு 21 சதுர கிலோமீட்டராகும். மங்களா எண்ணெய் வயலை ஒட்டிய பகுதியில் எண்ணெய் கிடைத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்று கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரஸ்வதி எனும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நாளொன்றுக்கு 248 பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதேபோல ஐஸ்வர்யா 46 எண்ணெய் வயலில் நாளொன்றுக்கு 182 பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேதாந்தா குழும நிறுவனங்களில் ஒன்றான கெய்ர்ன் இந்தியா இயக்குநர் குழு இடைக்கால ஈவுத் தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 5 ரொக்கத் தொகை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈவுத் தொகையாக ரூ. 1,097 கோடி விநியோகிக்கப்பட உள்ளது. மொத்த பங்குகளில் மூன்றில் இரண்டு சதவீத பங்குகள் வேதாந்தா குழுமம் வசம் உள்ளது. ஈவுத்தொகை விநியோக வரியாக ரூ. 159 கோடி செலுத்தப்படும்.
இடைக்கால ஈவுத் தொகை நிறுவன பங்குதாரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். பங்குதாரர்களை நிறுவனம் மிகவும் மதிக்கிறது என்பது இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி சுதிர் மாத்துர் தெரிவித்துள்ளார்.