மத்திய அரசு 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (எஸ்இஇஸட்) வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துள்ளது. ஹிண்டால்கோ, எஸ்டார், அதானி ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட அனுமதி ரத்தும் இதில் அடங்கும்.
கடந்த 18-ம் தேதி வர்த்தகத் துறைச் செயலர் ராஜீவ் கெர் தலைமையில் நடைபெற்ற அனுமதி வாரிய (பிஓஏ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையவுள்ள நிறுவனங்கள் இதுவரை பெற்று வந்த வரிச் சலுகையை திரும்ப அளிக்கவேண்டும் என்று தெரிவித் துள்ளது. ஹிண்டால்கோ நிறுவனம் ஒரிசாவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அலுமினிய தொழிற் சாலை அமைக்க அனுமதி பெற்றிருந்தது. இதற்கான அனுமதி 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு எவ்வித பணியும் தொடங்கப் படவில்லை. ஒவ்வொரு முறையும் கால நீட்டிப்பை இந்நிறுவனம் கேட்டு வந்தது. கடைசியாக வழங்கப்பட்ட கெடு டிசம்பர் 31-2013-ல் முடிந்தது.
குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் பன்முக தொழில் உற்பத்தி மண்டலத்தை உருவாக்க எஸ்ஸார் ஜாம்நகர் சிறப்புப் பொருளாதார லிமிடெட் நிறுவனம்
2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி பெற்றிருந்தது. இந்த அனுமதி 2009-ம் ஆண்டு முடி வடைந்தது. அதன்பிறகு கால நீட்டிப்பு கோரி இந்நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை.
இதேபோல அதானி டவுன்ஷிப் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் ஒரு வளாகம் கட்ட அனுமதி பெற்றது. இந்நிறு வனத்துக்கு 2007-ல் பிஓஏ அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தது.
தகவல் தொழில் நுட்பத் துறையில் தேக்க நிலை நிலவியதால் இங்கு ஐடி வளாகம் கட்டும் பணியை தாங்கள் மேற்கொள்ளவில்லை என அதானி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இது தவிர சென்னை பிஸினஸ் பார்க், ஒருங்கிணைந்த சரக்கு மைய மேம்பாட்டு திட்டம், குஜராத் தொழில்துறை கார்ப்பரேஷன் மேம்பாட்டு திட்ட அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டன.
பொதுவாக சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்குவதற்கு அனுமதித்தால் 3 ஆண்டுகளுக்குள் அது தொடங்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் பொருளாதார மண்டலத்தில் ஒரு பிரிவாவது உற்பத்தியைத் தொடங்கியிருக்கவேண்டும். கால நீட்டிப்பு தேவைப்பட்டால் அதுகுறித்து பிஓஏ-விடம் விண்ணப் பிக்க வேண்டும். அதுவும் குறிப் பிட்ட காலத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவில் எவ்வித செயல்பாடுகளும் தொடங்கப்படவில்லையெனில் அனுமதி ரத்து செய்யப்படும். அந்த வகையில் 9 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.