தூ
ண்டுதல் என்பது பௌதீக காரணியோ வேதியியல் காரணியோ அல்ல. ஆனால் வேதியியல் சார்ந்த உளவியல் என்றால் அதை மறுக்க முடியாது. சில நேரங்களில் நடத்தைகளும் பழக்க வழக்கங்களும் நாம் எதிர் கொள்ளக் கூடிய கருத்துகளை ஒட்டியும், வெட்டியும், பாதிப்புகளை ஏற்படுத்தியும் நம் புரிதலுக்குத் துணை செய்யும். சுற்றுச்சூழலில் இருக்கக் கூடிய காரணிகளும் வேகமான கேள்விகளும், விவேகமான முனைப்புகளும் ஏற்படுவதற்கு தூண்டுதல் அடித்தளமாக அமைகின்றது என்ற மார்ஷல் கோல்ட் ஸ்மித் (MARSHALL GOLD SMITH ) அவர்களின் கருத்தாக்கமும், புத்தக வரிகளும் நம்மை ஈர்க்கின்றன.
மாற்றம் கடுமையானது. உடல் சார்ந்த மாற்றங்களும், பௌதீக மாற்றங்களும், மனம்சார்ந்த மாற்றங்களும் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை மற்றும் அங்கீகரிக்கப்படுவதில்லை. உடனடி மாற்றம் ஏற்படுவதற்கு பிரச்சினைகளோ, தலைக்கு மேல் ஓடும் வெள்ளமோ இருந்தால் சாத்தியம் ஆகும் என்ற தவறான அணுகுமுறை பல நல்ல செயல்களை, நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் செய்து விடுகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் ஏராளமான தூண்டுதல்களை நமக்கு கொடுக்க வல்லது. சுற்றுச்சூழல் நம்மைக் கட்டுப்படுத்துகிறது, வழிநடத்துகிறது என்றால் மிகையாகாது. சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கீழ் வரும் மூன்று செய்திகள் முக்கியமானவையாகும்.
1. எதிர்பார்த்து இருத்தல்
2. தவிர்த்தல்
3. சீரமைத்தல்
எதிர்காலத்தை வரவேற்று தயார் நிலையில் இருப்பது புத்திசாலித்தனமாகும் அதுபோன்ற நேரங்களில் மாற்றங்களால் தேக்கங்களோ, திகைப்போ தோல்வியோ ஏற்படாது. எதிர்பாராமல் வரக்கூடிய மாற்றங்கள் அதிர்ச்சியைத் தரக்கூடியது மட்டும் அல்லாமல் நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ளவும் வழிகாட்டாது.
எதிர்பார்ப்புகளையும், சீரமைத்தலையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அந்த சூழலில் இருந்து தங்களை தவிர்த்துத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். தனிமைப்படுத்தும் பொழுது வெற்றி வீணாகப் போய்விடுகிறது. எனவே எந்த நிகழ்வுகளையும் தவிர்க்காமல் எதிர்கொள்ளுதலும், எதிர்பார்த்து இருத்தலும் மாற்றங்களை மனதளவில் ஏற்றுக்கொள்ள உதவி செய்யும்.
எதை அடைய வேண்டுமோ அதற்கு தகுந்தாற் போல சூழ்நிலைகளை மாற்றிக்கொண்டும் ஏற்றுக் கொண்டும் பயணித்தால் முடிவு நேர்மறையாக இருக்கும். சீரமைக்காத எண்ணங்களும், சீரமைக்காத செயல்களும் துருப்பிடித்த இரும்பிற்குச் சமம்.
தலைமை பொறுப்பில் உள்ளவர்களோ, மேலாளர்களோ மாற்றத்தை பற்றிய திட்டங்கள் தீட்டும் பொழுது அவைகளைச் செவ்வனே செயல்படுத்த முறையான பணியாளர்களையும் செயல்படும் திறன் உள்ளவர்களையும் தேர்ந்தெடுத்தல் அவசியம். சில நேரங்களில் திட்டம் இடுபவர்கள் மிகச் சீரிய முறையில் செயல்கள் உருவாக்கினாலும், செயல் படுத்துபவர்களின் திறமையின்மையால் சிதறிப் போக வாய்ப்புகள் உண்டு. நாம் எதைச் செய்கின்றோமோ அதில் தொழில் முறை சார்ந்த சிறப்பான செய்கைகளை வெளிப்படுத்துகின்றோம்.
செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் பொழுது செயல் முறைகள் முற்றாக வடிவமைக்கப்பட வேண்டும். உதாரணமாக இன்றைய பணியை நான் சரிவரச் செய்தேனா என்பது போன்ற ஊக்கமான உற்சாகமான கேள்விகள் கேட்கப்படும் பொழுது கிடைக்கும் விடைகள் விளைவுகளை நேர்கோட்டில் நகர்த்துகிறது. அதுபோன்ற கேள்விகள் கேட்காத பொழுது இடையில் ஏற்படும் சறுக்கல்களுக்கு நாமும் காணாமல் போய் நம்முடைய தூண்டுதல்களும் வீணாகப்போய் இலக்கை அடைய மறந்து குழப்பத்தின் உச்சியில் சுற்றிச்சுற்றி வந்து இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்கின்றோம். அதுபோன்ற நேரங்களில் அவைகளை எதிர்கொள்ள சில அறிவுரைகளை நூல் ஆசிரியர் வழங்குகின்றார். அவை ஒவ்வொன்றும் செயல்பாடுகளில் விறுவிறுப்பையும் வேகத்தையும் கூட்டி மாற்றங்களையும், முடிவுகளையும் முனைந்து முடிக்க தூண்டுதல்களாக அமைகின்றன.
1. பொறுப்புகளை கூட்டுதல்
தூண்டுதல் சில நேரங்களில் பொறுப்புகளை துறப்பதற்கும், விருப்பங்களை வெறுப்பதற்கும் அடிகோலும். அதுபோன்ற நேரங்களில் பொறுப்புகளை உணர்ந்து செயல்பாடுகளை வடிவமைத்து மாற்றங்கள் ஏற்படும் பொழுது அவைகளை உணர்ந்து செயல்படுதல் வெற்றியை வாசல் வரை கொண்டு வரும்.
2. உற்சாகத் தீயை எரியூட்டுதல் அவசியம்
எந்த நேரத்திலும் ஏனோ, தானோ என்று இல்லாமல் எப்படி இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு ஏனோ இருக்கின்றேன் என்று சொல்லாமல் மிகவும் உற்சாகமாக இருக்கின்றேன் என்ற பதில் உற்சாகத் தீயை நம்மிடம் ஒட்டிக்கொள்ள செய்யும். மாற்றங்களைப் பற்றி பேசும் பொழுதே அவநம்பிக்கையோடு எதுவும் நடக்காது என்ற எண்ணத்தோடு செயல்படும் பொழுது தூண்டுதல் அற்ற விளக்குத் திரியைப் போல ஒளியிழந்து வெற்றியைத் தாரைவார்க்க அவசரப்படுக்கின்றோம். எனவே உற்சாகத் தீயை கொழுந்து விட்டு எரியச்செய்வது அவசியம்.
3. சுய ஒழுக்கத்திற்கும் சுய கட்டுப்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும்
சுய ஒழுக்கம் என்பது எண்ணம், சுய கட்டுப்பாடு என்பது செயல். இரண்டும் இணைந்தால் வெற்றி உறுதி. ஒன்றில் மற்றொன்று இணைந்து மேம்போக்காக இருக்கும் பொழுது மாற்றங்களும் வெற்றியும் இருளில் மறைந்து விடும். சுய ஒழுக்கம் இல்லாத இடத்தில் சுய கட்டுப்பாடு வரவே வராது. சொல்லிக் கொடுத்த சுய ஒழுக்கம் தூண்டுதல்களால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளைத் தவிர்த்து மாற்றங்களையும் வெற்றிகளையும் தேடிக் குவிக்கிறது. பெருவாரியானவர்களுக்கு சுய ஒழுக்கம் என்பது சொல்லிக் கொடுத்தாலும் வருவதில்லை. சுய ஒழுக்கம் என்பது மற்றவர்களுடைய தூண்டுதல்களால் உள்ளே நிகழும் வேதியியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் ஆகும். அந்த மாற்றங்கள் தூண்டுதல்களைத் தூண்டும். அந்த தூண்டுதல் செயல்படும் பொழுது சுய கட்டுப்பாட்டை வழிமொழியும் அதுபோன்ற நேரங்களில் புதுமை புகுத்தலும், புரட்சிக்கரமான எண்ணங்களும், செயல்களும் நடைமுறைக்கு வருவது எளிதில் வசப்படும்.
4. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சிறு சிறு படிமானங்களாக மாற்றி ஒன்றன் பின் ஒன்றாக முடிக்க வேண்டும்.
மலை ஏறும் பொழுது மிக வேகமாக ஓடுபவர்கள் வெகுவிரைவில் ஓய்ந்து போகிறார்கள். குறைந்த தூரம் சீரான நடையில் செல்பவர்கள் ஓடுபவர்களைக் காட்டிலும் விரைவாக மேலே சென்று சேர்கிறார்கள். நீண்ட தூர ஓட்டமும், மலை ஏற்றமும் வேறு வேறு வகையான செயல்கள். ஆனால் அவைகளில் மாற்றங்கள் வருவதற்கோ வெற்றி பெருவதற்கோ எதிர்பார்ப்புகளும் சீரமைப்புகளும் வெகுவாகத் தூண்டப்பட்டு இலக்குகளை எளிதில் அடைய இயலும். நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் பழக்கவழக்கமாக மாறுவது அவசியம். நடத்தை மாற்றம் என்பது மன உறுதி இருந்தால் ஒழிய முயலக்கூடியதும், முடியக்கூடியதும் அல்ல. மன உறுதி என்பது எளிதில் வடிந்து விடும்.
எந்த ஒரு நாளிலும் காலையில் ஏற்படக்கூடிய செயல்களும், எந்த ஒரு மாற்றத்திலும் முதலில் நிகழக் கூடிய நிகழ்வுகளும் வெகு வேகமாகவும் உறுதியுடனும் முடிவுகளை எடுக்க உதவும். நேரம் செல்லச் செல்லவோ, நாட்கள் செல்லச் செல்லவோ உறுதி குறைந்து போய்விடும். எனவே, எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் ஆற அமர யோசனை செய்துகொண்டே செயல்படுத்துவது வெற்றியைத் தவறவிடும். மாறாக, எதிர்பார்ப்புகளும் சீரமைத்தலும் ஒன்றுகூடிச் செயல்படும் பொழுது தவிர்க்க கூடிய சூழ்நிலைகளைத் தவிர்த்து முன்னேறும் பொழுது மாற்றங்கள் எளிதாகின்றன. எதிர்பார்ப்புகளும், சீரமைத்தலும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் அந்த தூண்டுதல் வெற்றிக்கு வழிவகுக்கும். செய்யும் செயல்களில் தெளிவும், புரிதலும் கூடும்.
rvenkatapathy@rediffmail.com