மரபணு தொடர்பான நோய்களுக்கு காப்பீடு கிடையாது என்று மறுக்கக் கூடாது என்று மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீட்டு கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது மரபணுக் கோளாறு, எனவே இது பாலிசி கிளைமிலிருந்து நீக்கப்பட்ட பிரிவில் உள்ளது என்று காரணம் கூறி இன்சூரன்ஸ் கிளைம் தொகையினை மறுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் ஜெய் பிரகாஷ் தயால் என்பவருக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய போது, காப்பீட்டு பாலிசியில் ‘மரபணு நோய்கள்’ (Genetic Disorders) என்பதை பாலிசி கிளைம் தகுதியிலிருந்து நீக்கும் பட்டியலில் இட்டுள்ளதைக் குறிப்பிட்டு மரபணு தொடர்பான நோய்கள் என்பது “மிகவும் பரந்துபட்டது”, “இருண்மை நிரம்பியது”, “பாகுபாடு உடையது” என்று கூறி இதற்கு கிளைம் மறுப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-ம் பிரிவை மீறுவதாகும் என்று கண்டித்திருந்தது.
மேலும் காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India-IRDAI) காப்பீட்டு ஒப்பந்தங்களில் உள்ள ‘நீக்கங்கள்’ என்ற பிரிவின் விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மரபணு நோய்கள் என்று காரணம் காட்டி காப்பீட்டுதாரர்களுக்கு தொகையினை மறுக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
எனவே, “உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில் மருத்துவக் காப்பீடு ஒப்பந்தம் வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கெனவே உள்ள மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கான கிளைம் தொகையினை ‘மரபணுக் கோளாறு’ அல்லது மரபணு நோய் என்று காரணம் காட்டி மறுக்கக் கூடாது” என்று தன் உத்தரவில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ. ஆணையிட்டுள்ளது.
தி இந்து பிசினஸ் லைன்