வணிகம்

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனுக்கு 70%க்கும் மேல் கார்ப்பரேட்களே பொறுப்பு?

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளின் சீரழிவுக்கு பெரும்பங்கு காரணமாக இருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று நிபுணர்கள் கூறிவந்தது தற்போது ஆர்பிஐ தரவு மூலம் நிரூபணமாகியுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும் மொத்தக் கடனில் 37% பங்கு தொழிற்துறைக்குத்தான் செல்கிறது. இப்படியிருக்கையில் கார்ப்பரேட் மற்றும் தொழிற்துறை கடன்களில் 73% வாராக்கடனாக உள்ளது.

சில்லரைக் கடன்கள் வங்கிகள் அளிக்கும் கடன்களில் சுமார் 23% இருந்தாலும் அதில் வாராக்கடன் என்பது 3.71%தான் என்று ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்பிஐ தகவலை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கிறது.

கார்ப்பரேட்கள் மூலம் வாராக்கடன் அதிகரிப்புக்குக் காரணம் வர்த்தகத் தோல்வி, நடைமுறைக்கு ஒவ்வாத வர்த்தகத் திட்டங்கள், ரிஸ்க் மதிப்பீடு செய்வதில் போதாமை ஆகியவை காரணம் என்று வங்கிக் கடன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கார்ப்பரேட் வாராக்கடன்களை ஒப்பிடும்போது சில்லரைக் கடன்களாகிய வீட்டுக் கடன், வாகனக்கடன். சொந்தக் கடன் ஆகியவை மூலம் வங்கிக்கு கடன் தொகை பெருமளவு திரும்பி வந்து விடுகிறது, இதில் ஏமாற்று வேலை மிகமிகக் குறைவு.

கார்ப்பரேட்களை ஒப்பிடும்போது விவசாயக் கடன் மூலம் உருவாகும் வாராக்கடன் அளவு மொத்த வாராக்கடனில் 9%க்கும் குறைவுதான் என்கிறது தரவுகள். சேவைத்துறை மூலம் வாராக்கடன் மொத்த கடனில் 14%க்கும் குறைவே.

மொத்தமாகக் கூற வேண்டுமெனில் தரவுகளின் அடிப்படையில் மார்ச் 31, 2017-ன் படி பொதுத்துறை வங்கிகளின் செயலில் இல்லாத சொத்துக்கள் (NPA) மதிப்பு ரூ.6.41 லட்சம் கோடி என்றால் 4.70 லட்சம் கோடி கார்ப்பரேட்கள் மற்றும் தொழிற்துறை மூலம் உருவான வாராக்கடன்களே, செயலில் இல்லாத சொத்துக்களே.

SCROLL FOR NEXT