மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2025-26 நிதியாண்டில் 168 டன் தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட பிறகு, ரஷ்யாவின் டாலர் கையிருப்பை அமெரிக்கா முடக்கியது. இதையடுத்து, வெளிநாடுகளில் டெபாசிட் செய்து வைத்துள்ள தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி, தாயகம் கொண்டு வரும் நடவடிக்கையில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
இதன்படி, கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2025-26-ன் 2-ம் பாதியில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த 104.23 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக ஆண்டின் முதல் பாதியில் 63.83 டன் தங்கம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, 2025-26 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 168.06 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. 2023-24-ல் 107.21 டன், 2024-25-ல் 103.68 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு 880.52 டன். இதன் மதிப்பு ஏப்ரல் 17 நிலவரப்படி 122 பில்லியன் டாலர் ஆகும். இதில் இப்போதைய நிலவரப்படி 77 சதவீத தங்கம் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2023-ல் இது வெறும் 38 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள 23 சதவீத தங்கம் மட்டுமே வெளிநாட்டில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்கத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டினாலும், அதன் மொத்த தங்க கையிருப்பில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் அதன் மொத்த தங்க இருப்பு சுமார் 10 சதவீதம் (86 டன்) மட்டுமே அதிகரித்துள்ளது.
இருப்பினும், மற்ற சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது இருப்பை தீவிரமாக உயர்த்தி வருகின்றன. போலந்து தேசிய வங்கி 2026-ன் முதல் 3 மாதங்களில் அதிக தங்கம் வாங்கிய நாடாக உள்ளது. உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் அதிக தங்கம் வாங்கியுள்ளன.
2025-26-ல் கையிருப்பில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், ரிசர்வ் வங்கியின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு 11.7 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.