வணிகம்

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 481 புள்ளிகள் உயர்வு

பிடிஐ

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வரலாறு காணாத ஏற்றம் காணப்பட்டது. ஒரே நாளில் 481 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 27112 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 139 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8114 ஆக உயர்ந்தது.

சீன அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தில் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், இரு நாடுகளிடையே சுமுகமான உறவு நீடிக்கும் என்ற நம்பிக்கையும் பங்குச் சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும். அந்நிய முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கியதில் 12 துறைகளின் பங்குகள் 0.58 சதவீதம் முதல் 4.65 சதவீதம் வரை உயர்ந்தன.

ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருள் தயாரிப்பு, முதன்மை பொருள் தயாரிப்பு, ஆட்டோ மொபைல், மின்சாரம், வங்கித்துறை பங்குகள் உயர்ந்தன. 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாக சரிந்த பங்குச் சந்தை 10 நாள்களில் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மே மாதம் 12-ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 556 புள்ளிகள் உயர்ந்தது குறிப் பிடத்தக்கது. இதே போல தேசிய பங்குச் சந்தையும் 8 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் ஜேனெட் யேலன் இப்போதைக்கு வட்டி உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளார். கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை அக்டோபர் மாதத்தில் நிறைவடைய உள்ளது. இந்த அறிவிப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்தது. இந்திய சந்தையிலிருந்து உடனடியாக பெருமளவு அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

வியாழக்கிழமை சீனாவுடன் 5 ஆண்டுகளுக்கான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இரு இரு நாடுகளிடையே வர்த்தக சமநிலையை எட்ட வழிவகுக்கும். அத்துடன் 20000 கோடி டாலர் முதலீடு செய்ய சீனா ஒப்புக் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் ஹீரோ மோட்டோகார்ப் பங்கு விலை 5.67 சதவீதமும், ஹெச்டிஎப்சி 3.73 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 3.70 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ 3.57 சதவீதமும், பிஹெச்இஎல் 3.51 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 3.47 சதவீதமும் உயர்ந்தன.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. டாக்டர் ரெட்டீஸ் லேப், டாடா பவர், மாருதி சுஸுகி, என்டிபிசி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்தன. இன்ஃபோசிஸ் பங்கு விலை 1.08 சதவீதமும், ஹெச்யுஎல் பங்கு விலை 0.58 சதவீதமும் சரிந்தன. பங்குச் சந்தையில் மொத்தம் 2,235 பங்குகள் லாபம் ஈட்டின. 827 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 94 நிறுவனப் பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முன்தின விலையில் விற்பனையாயின.

3-வது நாளாக ரூபாய் ஏற்றம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து மூன்றாம் நாளாக ஏறுமுகம் கண்டது. 8 காசுகள் உயர்ந்ததில் ஒரு டாலருக்கு ரூ. 60.84 என்ற நிலையை எட்டியது. பிற சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்தது. இதனால் ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது. முந்தைய இரு நாள் வர்த்தகத்தில் மாற்று மதிப்பு 21 காசுகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT